கோயம்புத்தூர்: பேரூர் அடுத்த தீத்திபாளையம் கிராமத்திற்குள் கடந்த 12ஆம் தேதி இரவு 6 யானைகள் புகுந்தது. இவை தனியார் தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த வாழைகளை சேதப்படுத்தியது. இதனைத்தொடர்ந்து அதிகாலையில் நான்கு யானைகள் வனப் பகுதிக்குள் சென்ற நிலையில் ஒரு பெண் யானை வழி தவறி கிராமத்திலேயே சுற்றித் திரிந்தது.
இது குறித்து மதுக்கரை வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்ததை அடுத்து சுமார் 30க்கும் மேற்பட்ட வனப் பணியாளர்கள் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். வழக்கமாக ஊருக்குள் அல்லது தோட்ட பகுதியில் பகல் நேரத்தில் தஞ்சமடையும் யானைகளை மாலை நேரத்தில் விரட்டும் வனத்துறையினர் , பகல் நேரத்திலேயே மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் அந்த ஒற்றை யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது திக்கு தெரியாமல் ஓடிய யானை அங்கிருந்த கால்நடைகளை தாக்கியது. பின்னர் அங்கிருந்து ஆவேசமாக ஓடிக் கொண்டிருந்த யானை மதுக்கரை வனச்சரக வேட்டை தடுப்பு காவலர் நாகராஜ் என்பவரை கீழே தள்ளி காலில் மிதித்தது. இதில் பலத்த காயமடைந்த நாகராஜ் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.