கோவை: கோவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான, 'கோவை குற்றாலம்' அருவி கரோனா காரணமாக கடந்த ஆண்டு மூடப்பட்டது. தற்போது பாதிப்பு எண்ணிக்கை குறைந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன், அருவியில் குளிக்கப் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக, மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மீண்டும் பொதுமக்களின் அனுமதிக்குத் தடை:இதன்காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மீண்டும் கோவை குற்றாலம் அருவிக்கு வர சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
நீர் வரத்து குறைந்து, இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை, இந்தத் தடை உத்தரவு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடன, இசை விழா நடக்கும் காட்சி இந்நிலையில் வன உயிரின வாரவிழா சாடிவயல் பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த ஒரு வார காலத்திற்கு, அப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் அவர்களது பாரம்பரிய நடனம், இசை ஆகியவற்றை மேற்கொள்வர்.