கோயம்புத்தூர்:ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் கோவை வாலாங்குள குளக்கரை பகுதியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "மண்ணை காப்பாற்ற உலகம் முழுவதும் சேர்ந்து மக்கள் இயக்கம் தொடங்கப்பட உள்ளது. வருங்காலத்தில் தோராயமாக 60 முதல் 80 வகையான பயிர்கள் மட்டுமே இருக்கும் என உலக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 2045ஆம் ஆண்டு உணவு தயாரிக்கும் சக்தி 40 சதவீதமாகக் குறையும் எனவும் கூறுகின்றனர்.
மக்கள் தொகை 50 பில்லியினுக்கும் மேல் வரும்போது, மக்களுக்கு ஏற்ற உணவு உற்பத்தி குறைந்து இருக்கும். இப்போதிருந்தே பயிர்களை மீட்டெடுக்க வாய்ப்பு இருக்கிறது. சில திட்ட மாற்றம் மூலம் மண் வளத்தைப் பாதுகாக்க முடியும். உலகம் முழுவதும் 730 அரசியல் கட்சியினருக்குக் கடிதம் எழுதியுள்ளேன். மண், மண்ணில் உள்ள உயிர்கள் குறித்துத் தேர்தல் வாக்குறுதிகளில் ஏதேனும் ஒன்றைச் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளேன்.
மூன்று தன்னார்வ அமைப்புகள் ஈஷாவுடன் இணைந்து இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றோம். இசை, சினிமா விளையாட்டு என அனைத்துத்துறை வல்லுநர்களும் உடன் பயணிக்கின்றனர். வரும் மார்ச் 21ஆம் தேதி மண்வளத்தைப் பாதுகாக்க வேண்டும் எனச் சர்வதேச அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த 100 நாட்களில், 27 நாடுகளுக்குச் சென்று 30 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் மோட்டார் சைக்கிளில் பயணிக்க உள்ளேன்.
இந்த நேரத்தில் பல சவால்களைக் கடக்கவேண்டும். பனி, வெயில், மழை, போர் என அனைத்து சூழல்களையும் எதிர்கொள்ளும் விதமாக இந்த பயணம் இருக்கும். கடந்த இரண்டு வருடத்தில் எங்கே போனாலும் மண் பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது. பூனைக்கு மணி கட்ட முட்டாள் தேவை என்பதற்காக நான் இதைச் செய்கிறேன்" எனத் தெரிவித்தார்.