கோயம்புத்தூர்:கோவை அவிநாசி சாலையில் உள்ள பி.எஸ்.ஜி சர்வஜன மேல்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழா இன்று (ஆகஸ்ட் 2) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்கள் இடையே உரையாடினார்.
இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், ''DMK கண்டெடுத்த MKS (மு.க.ஸ்டாலின்) என்ற அவர், இந்த AMPக்கு (அன்பில் மகேஷ் பொய்யாமொழி) கொடுத்த பொறுப்பு தான், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர். அதன் வாயிலாகத்தான் நான் இந்த நிகழ்ச்சியில் இன்று கலந்து கொள்கின்ற வாய்ப்பை பெற்றிருக்கிறேன்.
பாரதியாரின் வாழ்க்கை PSG குழுமம் உண்மையாக்கி கொண்டுள்ளதற்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். நீதிக் கட்சியின் வழியில் திராவிட மாடல் ஆட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார். தந்தை பெரியார் வந்து சென்ற ஒரு பள்ளிக்கூடம் இது. ரவீந்திரநாத் தாகூர் தேசிய கீதம் பாடிய பள்ளி இது. மகாத்மா காந்தி, இந்திரா காந்தி ஆகியோரால் பாராட்டுப் பெற்ற ஒரு பள்ளிக்கூடம் இது.
1921ம் ஆண்டு தீபாவளியன்று பீளமேடைச் சேர்ந்துள்ள இந்தப் பகுதி மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது தான், இந்தப் பள்ளி. இப்படிப்பட்ட பெருமைமிக்க பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் பெருமையாக நினைக்க வேண்டும். பீளமேடு பகுதியை, ஒரு முக்கியமான பகுதியாக மாற்றி காட்டியது கல்வி நிலையங்கள் தான். அந்தந்த காலங்களுக்கு ஏற்ப மாணவர்களுக்குப் பாடங்களை நடத்த வேண்டும்.