கோயம்புத்தூர்: இன்று (ஜூன் 17) மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கோயம்புத்தூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “கோயம்புத்தூர் மாநகராட்சியில் 197 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு சாலைகளை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த வாரம் 113 கோடி ரூபாய் மதிப்பில் சாலை விரிவாக்கம், புதிய சாலைகள் உள்ளிட்ட சாலைப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இன்று (ஜூன் 17) 38 கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய பணிகள் தொடங்கப்பட்டன. கூடுதல் நிதி பெற்று கோயம்புத்தூர் மாநகராட்சியில் விடுபட்ட அனைத்து சாலைகளும் புதுப்பிக்கப்படும்” எனக் கூறினார்.
தொடர்ந்து, ஆட்சி மாறினால் மின்சாரத்துறை அமைச்சர் சிறை செல்வார் என்ற தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “சில பேர் வேலை வெட்டி இல்லாமல் இருக்கின்றனர். எனக்கு நிறைய வேலை இருக்கிறது. வேலை வெட்டி இல்லாதவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
அதாவது, கரந்த பால் மடி புகாது என்ற பழமொழிக்கு ஏற்ப நீங்கள் கூறிய நபரின் (அண்ணாமலை) கனவு எந்த காலத்திலும் பலிக்காது. நோட்டோவோடு போட்டி போடுபவர்கள் கோயம்புத்தூர் மாநகராட்சியில் எத்தனை வார்டில் நின்றார்கள்? இவ்வளவு வீர வசனம் பேசுபவர் அரவக்குறிச்சியில் ஏன் மண்ணைக் கவ்வினார்? ஏன் மக்கள் விரட்டியத்தனர்?
கடுமையான முயற்சிகளை எடுத்தும் அவர்களால் கோவை மாநகராட்சியில் உள்ள ஒரு வார்டிலும் ஜெயிக்க முடியவில்லை. ஒரு மாநகராட்சி, நகராட்சியிலும் ஜெயிக்க முடியவில்லை. ஊடக விளம்பரத்திற்காக இதுபோல பேசுகிறார். நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால், இப்போதே நடவடிக்கை எடுக்கலாம்.