கோயம்புத்தூர்: சேலம் செல்வதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் கோவை வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், "தமிழக சட்டமன்ற சிறப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது. அரசின் தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
ஆளுநர் 10 சட்டமுன்வடிவுகளுக்கு அனுமதி வழங்காமல் இருப்பதாக தனித்தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. பெரும்பாலான சட்டமுன்வடிவுகள் வேந்தர் நியமனம் குறித்தது தான் அவையில் நிறைவேற்றபட்டு ஆளுநருக்கு அனுப்பி அனுமதி அளிக்காததால் இது குறித்து அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.
சட்டமுன்வடிவுகளை மறு ஆய்வுக்கு எடுத்து கொள்ள இந்த தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. சட்டமன்றத்தில் எங்கள் கருத்துகளை தெரிவித்து இருக்கின்றோம். ஆளுநர் சட்டமுன்வடிவுற்கு அனுமதி வங்காமல் இருப்பதைச் சுட்டிகாட்டி வழக்கு தொடுத்து இருக்கும் நிலையில், சிறப்பு சட்டமன்ற விவாதம் நடத்த என்ன காரணம்? இதற்கு முறையான பதில் சட்டமன்றத்தில் கிடைக்க வில்லை.
சட்டமுன்வடிவுகள் குறித்து நீதிமன்றத்தில் வழக்கும் நிலுவையில் இருக்கும் நிலையில், ஏன் அவசர, அவசரமாக சட்டமன்றத்தைக் கூட்டி இருக்கின்றனர்? சுய லாபத்திற்காக இந்த சட்டமுன்வடிவு திமுக அரசால் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பு வந்தால் இந்த கூட்டமே அவசியம் கிடையாது. கடந்த 1994 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இதே கோரிக்கைக்காக சட்டமுன்வடிவு கொண்டு வரப்பட்டபோது திமுக என்ன நிலைப்பாடு எடுத்தது? பேராசிரியர் அன்பழகன் இது குறித்து பேசி இருக்கின்றார்.
அனைத்துப் பல்கலைகழகத்திலும் துணைவேந்தர் நியமனம் அரசால் செய்வது என்பது ஜனநாயகத்தில் ஏற்றுகொள்ள கூடிய நல்ல நோக்கமல்ல என அன்பழகன் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் நெஞ்சுக்கு நீதி என்ற புத்தகத்தில் 511 பக்கத்தில் இது குறித்த கருத்தை தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக வேந்தர் தொடர்பாக சட்டம் அவையில் நிறைவேற்றி இருக்கின்றனர்.
குடியரசுத்தலைவர் ஆட்சி நடந்தால் யார் வேந்தராக இருப்பார் என கலைஞர் எழுதியிருக்கிறார்.
சட்டமுன்வடிவுகள் குறித்து ஆளும்கட்சியாக ஒரு நிலைப்பாடு, எதிர்கட்சியாக ஒரு நிலைப்பாடு என்று இருக்கும் கட்சி, திமுக துணைவேந்தர் நியமனம் குறித்து அதிமுக கொண்டு வந்த அன்றைக்கே ஏற்றுக்கொண்டு இருந்தால் இன்று இந்த பிரச்சினை வந்திருக்காது.
29 ஆண்டுகளுக்கு முன்பே இந்த சட்ட முடிவைக் கொண்டு வர முயன்றது அதிமுக. இப்போது இருக்கின்ற பிரச்சினை, துணைவேந்தர் நியமனம் குறித்து மாநில அரசு நியமனம் செய்பவர்களை ஆளுநர் ஏற்கவில்லை என்பதுதான். ஆளுநருக்கும், திமுக அரசுக்கும் இருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக இது தீர்மானமாக கொண்டு வரப்படுகின்றது.