கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் விமான நிலையத்தில் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, "கோவை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் அம்மன் அர்ச்சுணன் மகன் கோபாலகிருஷ்ணன் உடல்நல குறைவால் இறந்து விட்டார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பதினருக்கு ஆறுதல் சொல்ல வந்துள்ளேன்.
சனாதன விவகாரம் குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு, அதற்குள் செல்ல விரும்பவில்லை, இருந்தாலும் நீங்கள் கேட்பதால் கூறுகிறேன் என தொடங்கிய அவர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது. எங்கு பார்த்தாலும் விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு இப்படி மக்களை வாட்டி வதைக்கும் சூழலில் மக்களை திசை திருப்புவதற்காக சனாதன தர்மம் என்ன கூறி நாடகத்தை அரங்கேற்றி வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.
சனாதனம் பேசும் திமுக கடந்த காலத்தில் ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் போட்டியிட்டபோது அவருக்கு எதிர்த்து ஓட்டு போட்டவர்கள் தான் திமுகவினர். அவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்ற நிலையில் எதிர்த்து வாக்களித்தவர்கள் திராவிட முன்னேற்ற கழகத்தைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள். தற்போதைய ஜனாதிபதி திரௌபதி முர்மு போட்டியில் அவருக்கு எதிர்த்து ஓட்டு போட்டார்கள். இவரும் மலைவாழ் இனத்தைச் சார்ந்தவர் இவரையும் ஆதரிக்கவில்லை எதிர்த்து வாக்களித்தனர். இப்படி சனாதன தர்மத்தை பேசுகிறவர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் உயர் பதவியில் போட்டியிட்டவர்களுக்கு எதிர்த்து வாக்களித்துள்ளனர் என்று சாடினார்.
இதையும் படிங்க:தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தமிழகத்தின் காட்வின், மாலதி!
தொடர்ந்து பேசிய அவர், "தனபால் சட்டப்பேரவை தலைவராக நியமிக்கப்பட்டபோது அவரை இழிவுபடுத்தியவர்கள் தான் இன்றைய திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள். சட்டப்பேரவை தலைவராக தனபால் இருந்த பொழுது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து அவரை அந்த ஆசனத்தில் இருந்து கீழே இறக்கி எங்களோடு அமர வைத்து சட்டமன்ற விவாதத்தில் அவர் மீது பல்வேறு விமர்சனம் செய்தது தான் இந்த திராவிட முன்னேற்றக் கழக அரசு. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு துரோகம் மற்றும் அநீதி இழைத்தவர்கள் தான் இந்த திமுகவினர் எனக் கடுமையாக சாடினார்.
மேலும், அதிமுக மதத்திற்கும் சாதிக்கும் அப்பாற்பட்ட கட்சி. உதயநிதி ஸ்டாலின் சனாதன ஒழிப்பு என்று சொல்லி அதனைபேசு பொருளாக்கி வருகிறார். அவர் செய்த துரோக செயல்களால் தமிழகம் குட்டிச்சுவர் ஆகி இருக்கிறது. எல்லாத் துறைகளும் ஊழல் மலிந்துள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. நேற்றைய தினம் திருப்பூர் மாவட்டத்தில் நான்கு பேர் துடிக்க துடிக்க வெட்டி கொலை செய்துள்ளனர். நேற்று மட்டும் தமிழகத்தில் ஒன்பது கொலைகள் நடந்துள்ளது. கொலை நடக்காத இடம் தமிழகத்தில் இல்லை.