கோயம்புத்தூர்: முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, கடந்த 2016-2022 வரையிலான காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.58.23 கோடி சொத்து சேர்த்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று (மார்ச் 15) காலை முதல் அவரது வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவர்களாக கருதப்படுபவர்களின் வீடு, அலுவலகங்களிலும் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
அந்தவகையில் கோவை வடவள்ளிப் பகுதியில் வசிக்கும் அதிமுக கோவை தெற்கு புறநகர் இளைஞரணிச் செயலாளர் சந்திரசேகர் என்பவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று சோதனை மேற்கொண்டனர். சுமார் 10 மணி நேரம் அலுவலர்கள் சோதனை நடத்திய நிலையில், தற்போது சோதனை நிறைவடைந்துள்ளது.
வடவள்ளி சந்திரசேகர் வீட்டில் சோதனை சோதனைக்குப்பின் திரும்பிய அலுவலர்களை சந்திரசேகர் வீட்டின் முன் திரண்டிருந்த அதிமுக ஆதரவாளர்கள் சூழ்ந்து திமுகவை கண்டித்தும் காவல் துறையைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.
அதனைத் தொடர்ந்து ஆதரவாளர்களைச் சந்தித்த சந்திரசேகரின் மனைவி சர்மிளா சந்திரசேகர், "எவ்விதப் பிரச்சனையும் இல்லை. தங்களுக்காக காலையிலிருந்து காத்திருந்த உங்கள் அனைவருக்கும் நன்றி" எனத் தெரிவித்தார். ஆனால் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை முடிந்ததற்காக வழங்கப்பட்டுள்ள நோட்டீசை காண்பிக்க அவர் மறுத்துவிட்டார்.
ஆதரவாளர்களுக்கு உணவு, ஜூஸ் வழங்கல் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு இடையில் சந்திரசேகர் வீட்டின் முன் கூடிய ஆதரவாளர்களுக்கு ஜூஸ், உணவு, குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: 'என்னம்மா இப்படி பண்றீங்களேமா...' எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்கூடிய அதிமுகவினருக்கு காலாவதியான வாட்டர் பாட்டில் விநியோகம்!