கோயம்புத்தூர்:வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் நேற்று (நவ.08) இரவு முழுவதும் கனமழை பெய்தது.
இதனால் மாநகர் மற்றும் புறநகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் மழைநீர் ஆர்ப்பரித்து ஓடியது. குறிப்பாக நகரின் முக்கிய சந்திப்புகளான உப்பிலிபாளையம் மேம்பாலம், லாங்கா கார்னர் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. பாலத்தின் கீழ்ப்பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் அப்பகுதிகளில் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், கோவையின் புறநகர் பகுதிகளான வீரபாண்டி பிரிவு, கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை நீர் தேங்கியது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளான, கணுவாய், தடாகம், சோமையனூர் பன்னிமடை, நஞ்சுண்டாபுரம், பொன்னுத்து அம்மன் கோவில் ஆகிய பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாகக் கணுவாய்- பன்னிமடை செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலத்தில் மழை நீர் ஆர்ப்பரித்து வெள்ளம் போல் ஓடியது.