கோவையில் கொட்டித்தீர்த்த கனமழை.. மீன் பிடித்த இளைஞர்கள்.. பாடல் பாடி மகிழ்ந்த மதுப்பிரியர்.. கோயம்புத்தூர்: வடகிழக்கு பருவமழை வலுப்பெற்று வரும் நிலையில் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் கன மழை பெய்து வந்தது.
இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் நேற்று (நவ 09) இரவு பரவலாகக் கனமழை பெய்ததன் காரணமாக பல்வேறு சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனிடைய கோவை செல்வபுரம் சுண்டக்காமுத்தூர் சாலையில் மழைநீர் வடிகால் வழிந்து சாலையில் மழைநீர் ஓடி வருகிறது.
இந்த பகுதியில் உள்ள செல்வ சிந்தாமணி குளம் நிரம்பி, மழைநீர் வடிகாலில் நீர் வழிந்து சாலையில் ஓடுகிறது. மேலும், செட்டி வீதி அசோக் நகர் பகுதிகளில் உள்ள வீடுகளிலும் நீர் புகுந்துள்ளது. 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்குள் மழைநீர் சாக்கடை நீருடன் கலந்து செல்கிறது.
செல்வ சிந்தாமணி குளம் நிரம்பி அடுத்து உக்கடம் பெரியகுளம் குளத்திற்குச் செல்ல வேண்டிய நிலையில், உக்கடம் குளம் முகத்துவாரம் அடைப்பு காரணமாக மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுவதுடன், குடியிருப்புகளிலும் புகுந்துள்ளது. கடந்த ஒரு வாரகாலமாக கோவையில் மழை பெய்து வரும் நிலையில், அவ்வப்போது குளத்தில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டிருந்தால் மழைநீர் வழிந்து ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்த்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இந்த பகுதியில் மழை பாதிப்புகள் தொடர்பாக நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராஜ், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், மாநகராட்சி மேயர் கல்பனா, பொதுச்சுகாதாரக்குழு தலைவர் மாரிசெல்வம் மற்றும் அதிகாரிகள் நேற்று (நவ 09) இரவு அங்கு ஆய்வு செய்தனர்.
செல்வ சிந்தாமணி குளம் நிரம்பியதை அடுத்த ஊருக்குள் தண்ணீர் புகாமல் இருக்க தண்ணீர் திறக்கப்பட்டது. அதிகமாகத் தண்ணீர் வந்ததால், கால்வாய் உடைக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றும் பணி நடைபெற்றது. இதனால் சாலையில் வெள்ளம் கரை புரண்டு ஓடி வருவதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், குளத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் அசோக் நகர்ப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதை அடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் உணவுகளை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கு மத்தியில், அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் சிறுவர்கள் வெள்ள நீரில் மீன் பிடித்தனர். மேலும் போதையில் இருந்த நபர் ஒருவர் திரைப்பட பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஜப்பான் சென்ற தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள்.. அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம்!