தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடிபோதையில் தந்தையை கொன்ற மகன் கைது! - கோவையில் தந்தையை கொன்ற மகன்

கோயம்புத்தூர்: செல்வபுரம் அருகே குடிபோதையில் தந்தையை கொன்று, அவரது உடலை அடக்கம் செய்ய முயன்ற மகன் உள்பட அவரது குடும்பத்தினரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

தந்தை கொலை
குடிபோதையில் தந்தையை கொன்ற மகன் கைது

By

Published : Jun 1, 2020, 5:28 PM IST

கோயம்புத்தூர் செல்வபுரத்தை அடுத்த பனைமரத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(50). இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு திவாகர் (21) என்ற மகனும், ஷாலினி என்ற மகளும் உள்ளனர். திவாகர் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதால், அவருக்கும் அவரது தந்தை முருகனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், திவாகர் வழக்கம்போல் நேற்றிரவு குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து வீட்டின் கதவைத் தட்டியுள்ளார். ஆனால், முருகன் கதவை திறக்காமல் இருந்துள்ளார். திவாகர் பலமுறை கதவை தட்டியும் கதவை திறக்க மறுத்ததால் அவர் கோபமடைந்துள்ளார்.

சிறிது நேரம் கழித்து முருகன் கதவை திறக்கவே கோபத்திலிருந்த திவாகர், அவரது தந்தை முருகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் நீடித்த நிலையில் ஆத்திரமடைந்த திவாகர் பெண்கள் தலை கோதும் மை கோதியைக் கொண்டு முருகனின் நெஞ்சில் குத்தியுள்ளார்.

இதில் சம்பவ இடத்திலேயே முருகன் உயிரிழந்தார். இதனால், அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் முருகன் உயிரிழந்த செய்தியை வெளியில் யாருக்கும் தெரியாதபடி மறைத்தனர்.

பின்னர், முருகனின் குடும்பத்தினர் அவரது உடலை யாருக்கும் தெரியாமல் அப்பகுதியில் உள்ள மயானத்திற்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்ய முயன்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து கிடைத்த ரகசியத் தகவலின்படி சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் விரைந்து வந்தனர். அங்கு முருகனின் உடலை ஆய்வு செய்ததில் அவரது உடலில் நெஞ்சில் காயம் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து முருகனின் உடலை மீட்ட காவல் துறையினர், உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர், முருகனின் மனைவி சித்ரா, மகன் திவாகர் ஆகியோரை கைது செய்த காவல் துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details