கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைகட்டி அடுத்த கேரள மாநிலம் அகழி பகுதியைச் சேர்ந்தவர் ஞானபிரகாஷ். டிராக்டர் ஓட்டுநரான இவர் ஆனைகட்டி பகுதியில் விவசாய பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று(செப் 24) வழக்கம்போல் விவசாய பணிக்காக ஆனைகட்டி அருகே உள்ள மூணு குட்டை பகுதியில் தங்கல்வேல் என்பவரது தோட்டத்தில் ஏர் உழும் பணியில் ஈடுபட்டிருந்தார். இரவு ஏழு மணி அளவில் பணியை முடித்துவிட்டு தனது கிராமத்திற்கு நண்பர் அருண்குமார் உடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
இருசக்கர வாகனம் தோட்டத்திலிருந்து வெளியே வந்த நிலையில் எதிரே வந்த ஒற்றை ஆண் காட்டு யானை திடீரென அவர்களை தாக்கியது. இதில் அருண்குமார் யானையிடம் இருந்து தப்பி ஓடிய நிலையில் ஞானபிரகாஷ் யானையிடம் சிக்கினார். இதனையடுத்து அவரை தூக்கி வீசிய ஒற்றை யானை அங்கிருந்து சென்றது. இதில் சம்பவ இடத்திலேயே ஞானபிரகாஷ் உயிரிழந்தார். இதுகுறித்து அருண்குமார் அங்குள்ளவர்களிடம் தகவல் தெரிவித்ததையடுத்து பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினருக்கு இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.