கோவையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கோவை மாநகரில் பழுதடைந்த சாலைகள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 44 கோடி நிதி ஒதுக்கீடு செய்து சாலை பணிகள் முடிவடைந்துள்ளன. 26 கோடி மதிப்பில் 6 இடங்களில் புதிதாக சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 140 கோடி ரூபாய் மதிப்பில் சாலை அமைக்கும் பணிகள் நெடுஞ்சாலை துறையினர் சார்பில் நடைபெற்று வருகிறது.
210 கோடி மதிப்பிலான நிதியில் 117 கி.மீ. சாலைப் பணிகள் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான சாலைப் பணிகள் முடிவடைந்துள்ளன. மார்ச் மாதத்திற்குள் விடுபட்ட சாலைகள் புதுப்பிக்கப்படும். பல ஆண்டுகளாக கடந்த ஆட்சியில் சாலைகள் போடவில்லை. அதனால் சாலைகள் சேதமடைந்துள்ளன. வட கிழக்கு பருவமழை காலத்தில் சாலைப் பணிகளை செய்யக்கூடாது என்றில்லை. எல்லா நாளும் மழை பெய்வதில்லை. நிதி வந்து டெண்டர் முடிந்த பின்னர் தான் பணிகளை செய்ய முடியும். மழைக்காலத்தில் சாலை அமைக்கும் பணிகள் நடக்காது. ஒரு கட்சி தலைமைக்கு தெரியாமல் பாஜக மாவட்ட நிர்வாகிகள் பந்த் அறிவித்தனர்.
சரியான வழிநடத்தும் தலைவர் என்றால் ஏன் ஒப்புதல் இல்லாமல் பந்த் அறிவித்தார்கள் என கேட்டிருக்க வேண்டும். நீதிமன்றம் வரை வழக்கு சென்றவுடன் நீதிமன்றத்தில் தனக்கு தொடர்பில்லை என்பது முறையானது அல்ல. அக்கட்சியினருக்குள் ஒரு முடிவுக்கு வர வேண்டும். பாஜக மாநிலத் தலைவர் ஒரு அரசியல் கோமாளி. அரசியல் கோமாளி தொடர்பான கேள்விகளை அரசு நிகழ்ச்சிகளில் கேட்க வேண்டாம்.
கட்சி தலைமைக்கு தெரியாமல் மாவட்ட நிர்வாகிகள் பந்த் என எப்படி சொல்ல முடியும்? கட்சித் தலைவர் என்ன செய்ய வேண்டும்?. கட்சி நிர்வாகிகளிடம் பந்தை இரத்து செய்ய வேண்டும் என சொல்லியிருக்க வேண்டும்.