கோயம்புத்தூர்:கோவை அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, நகர்ப்புற சுகாதார திட்டத்தின் கீழ் அந்த மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டடத்தைப் பார்வையிட்டார். மேலும் புதிய கரோனா அவசர சிகிச்சை பிரிவு, குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை பிரிவு மற்றும் இருதய நோய் பிரிவு ஆகிய பிரிவுகளில் ஆய்வு மேற்கொண்டு மருத்துவக் குழுவினர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ”தமிழக முதலமைச்சர் சுகாதாரத் துறைக்கு என 17 தலைப்பில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். நகர்ப்புற ஆரம்ப சுகாதார நல்வாழ்வு மையங்களை மேம்படுத்த 208 நல்வாழ்வு மையங்களையும் அறிவித்துள்ளார். கரோனா காலத்தில் ஓரளவுக்கு கட்டுப்பாட்டில் வைத்தால் கூட மருத்துவ கட்டமைப்பை தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்பது நமக்கு பாடமாக உள்ளது.
ஜெய்க்கா திட்டத்தில் கோவை அரசு மருத்துவமனையில் 12 அறுவை சிகிச்சை அரங்குகளுடன் தீக்காய சிகிச்சை பிரிவு, குடல்நோய் துறை, நரம்பியல் துறை, எலும்பியல் துறை போன்ற துறைகள் பல்வேறு வசதிகளுடன் தயாராகிவருகிறது. மேலும் கோவை அரசு மருத்துவமனையில் 32 ஹைபிரீட் அவசர சிகிச்சை படுக்கைகளின் பணி முடியும் தருவாயில் உள்ளது. அதனை நாங்கள் தற்போது பார்வையிட்டோம்.
தடுப்பூசி செலுத்தவில்லை: அதேநேரம், தமிழ்நாட்டில் கரோனா தொற்றுள்ளவர்களின் எண்ணிக்கை 100 க்கும் கீழே பதிவாகி வருகிறது. ஆனால், கரோனா கரை ஒதுங்கும் நேரத்தில் கவனக்குறைவாக இருக்கக்கூடாது. கரோனாவின் மூன்று அலைகளைத் தாண்டி விட்டோம். அதற்காக நான்காவது அலையில் சிக்கிக் கொள்ளக்கூடாது. மேலும் வெளிநாட்டில் இன்னும் கரோனாவின் தாக்கம் ஓயவில்லை. டெல்லியில் தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. ஐஐடி, சத்யசாய் யுனிவர்சிட்டி ஆகியவற்றில் அதிகரித்த பாதிப்பை குறைத்துள்ளோம்.