கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோக உரிமை சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இதைக் கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதன் ஒரு பகுதியாக குடிநீர் உரிமையை ரத்துசெய்யக்கோரியும், குடியிருப்புப் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் அமைப்பதை கைவிடக் கோரியும் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல் துறையினரின் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தடையை மீறி சிங்காநல்லூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திக் தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது, மாநில அரசைக் கண்டித்தும் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும் சூயஸ் குடிநீர் திட்ட ஒப்பந்த விதிமுறைகள் தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் வெளிப்படையாக அறிவிக்க மறுப்பதாகவும் குடிநீர் கட்டணம் உயர வாய்ப்புள்ளது எனக் குற்றஞ்சாட்டியுள்ளனர்.