மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதேபோல் தமிழகத்திலும் பல்வேறு கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக இன்று கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் அக்கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் தலைமையில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த குடியுரிமை திருத்த சட்டம் இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கும், இலங்கை தமிழர்களுக்கும் எதிரானது எனவும் இதனால் இந்தியாவில் உள்ள சிறுபான்மை மக்கள், இலங்கை தமிழர்கள் நம் நாட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலை உருவாகும் என்றும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.