நவம்பர் 11ஆம் தேதி காலையில் கோவை அவிநாசி சாலை, கோல்டு விங்ஸ் பகுதியில் அதிமுக கொடிகள் கம்பங்களில் வரிசையாக கட்டப்பட்டிருந்தன. அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த அனுராதா (எ) ராஜேஸ்வரி என்பவர் கொடிக் கம்பம் சரிந்து விழுவதைக் கண்டு இருசக்கர வாகனத்தை நிறுத்த முயன்றுள்ளார். இதில் நிலை தடுமாறி அவர் கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த லாரி அவரது காலில் ஏறியது. இந்த விபத்தில் அவரது இடது கால் பெரும் பாதிப்பிற்குள்ளானது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சிகள், பொது மக்கள் எனப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திமுக சார்பில் கண்டனம் தெரிவிக்கும் வகையில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. கோவை சிங்காநல்லூர் தொகுதி திமுக எம்எல்ஏ நா.கார்த்திக் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 250க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.