ஊரடங்கால் மக்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இதனால் அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்கான பணம் இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து தவித்துவருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு அரசு 4 மாதங்களுக்கான மின் கட்டணத்தைக் கட்ட வேண்டும் என்று மக்களை நிர்பந்தித்துவருகிறது.
மேலும், மின் கணக்கிடும் முறையில் மாற்றம் ஏதும் இல்லை என்று அரசு கூறியது. அதன்படி, ஊரடங்குக்கு முந்தைய காலங்களில் செலுத்திய மின் கட்டணத்தையே மின் பயனீட்டாளர்கள் கட்ட வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. இதனால் வழக்கத்தை விட அதிகமான மின் கட்டணம் செலுத்தும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர்.
இதை எதிர்த்துப் பிரதான எதிர்க்கட்சியான திமுக உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பிவந்தன. அதில், ஊரடங்கு காலத்தில் முந்தைய மாதத்தில் செலுத்தப்பட்ட மின் கட்டண தொகைக்குப் பதிலாக, அதற்கான யூனிட்டைக் கழித்துக் கொண்டு எஞ்சிய யூனிட்டுகளுக்கான தொகையை இரு தனித்தனி பில்களாகப் பிரித்து மின் கட்டணம் வசூலிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின்போது, அரசுத் தரப்பில் யூனிட் அடிப்படையில் கணக்கிட முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், அரசு கூறும் கணக்கிடும் முறை சரியானது என்று கூறி கடந்த ஜூலை 16ஆம் தேதி வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் கறுப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்! இது பல்வேறு தரப்பினருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இச்சூழலில், திமுக தலைவர் ஸ்டாலின், மின் கட்டண உயர்வைக் கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் என அனைவரும் தங்கள் வீடுகளில் கறுப்புக் கொடி கட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, சென்னை தேனாம்பேட்டையிலுள்ள தனது இல்லத்தின் முன்பு ஸ்டாலின் கறுப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் திமுகவைச் சேர்ந்த தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள், தொண்டர்கள் என அனைவரும் தங்களது வீடுகளில் கறுப்புக் கொடி கட்டி, கையில் கறுப்புக் கொடி ஏந்தி அரசுக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க:மின் கட்டணம் உயர்வு - கறுப்புக் கொடி ஏந்தி திமுக ஆர்ப்பாட்டம்