கோயம்புத்தூர்:அதிமுகவில் இளைஞர் பாசறை மாநிலத் துணைச் செயலாளராக இருந்தவர் விஷ்ணுபிரபு. இவர் அண்மையில் திமுகவில் இணைந்தார். இந்நிலையில் இவர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியபோது ஆனைக்கட்டி பகுதியில் உள்ள சொகுசு பங்களா குறித்து சில தகவல்களை வெளியிட்டிருந்தார்.
அது குறித்து சில தனியார் வாரப் பத்திரிகைகளுக்குப் பேட்டியும் அளித்திருந்தார். இந்நிலையில் எஸ்.பி. வேலுமணிக்கு நெருங்கிய ஆதரவாளரான ஷர்மிலா பிரியா என்பவர் கேரள மாநிலம் சோலையூர் காவல் நிலையத்தில் விஷ்ணுபிரபு மீது புகார் ஒன்றை அளித்துள்ளார்.
எஸ்.பி. வேலுமணி ஆதரவாளர்கள் மீது புகார் பொய் புகார் - பாதுகாப்பு வேண்டும்
இது குறித்துப் பேசிய விஷ்ணுபிரபு, “கேரள மாநிலத்தில் உள்ள சொகுசு பங்களா ஒன்றின் உரிமையாளரான சண்முகப்பிரியா காவல் நிலையத்தில் என் மீது பொய்யான புகார் அளித்திருக்கிறார். அவர் யார் என்பது எனக்குத் தெரியாது.
அவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினால் பல உண்மைகள் தெரியவரும். வேலுமணியின் டெண்டர் மோசடி குறித்து பல்வேறு ஆவணங்கள் என்னிடம் உள்ளன. அது தேவைப்படும்பொழுது வெளியிடுவேன். இந்த ஆவணங்கள் என்னிடம் மட்டுமல்லாமல் எனது பத்துக்கும் மேற்பட்ட நண்பர்களிடமும் உள்ளன.
வேலுமணியின் ஆதரவாளர்கள் சிலர் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். எனவே எனக்குப் பாதுகாப்புத் தருமாறு கோயம்புத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளேன்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை போலி சிங்கம் - மதன் ரவிச்சந்திரன் விமர்சனம்