பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் நடத்தி வரும் வேல் யாத்திரை கோவையில் நேற்று நடைபெற்றது. இதற்காக கோவைக்கு வந்த எல்.முருகன் மருதமலை கோயிலுக்கு சென்று வேல் யாத்திரை நடத்தும்படி இருந்தது.
ஆனால் வேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் மருதமலை கோயிலுக்கு சென்று வழிபட்டுவிட்டு மட்டும் வந்தார். அதனைத் தொடர்ந்து கோவை சிவானந்தகாலனி பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் கலந்துகொண்டார்.
மருதமலை கோயிலில் வழிபட்ட எல்.முருகன்
இதில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், கர்நாடக துணை முதலமைச்சர் அஸ்வந்த் நாராயண், பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் கர்நாடக துணை முதலமைச்சர் அஸ்வந்த் நாராயண் பேசுகையில், ''இந்த யாத்திரை தொடங்கியதிலிருந்து திமுக கட்சியினருக்கு தூக்கம் கலைந்துவிட்டது. முருகனை இழிவுப்படுத்திய கறுப்பர் கூட்டத்திற்கு திமுக ஆதரவளித்து கொண்டிருக்கிறது.
இவர்கள் இருவருக்கும் நாம் தக்க பாடம் புகட்ட வேண்டும். நமது கலாசாரம் பண்பாடு அனைத்திற்கும் திமுக எதிராக செயல்பட்டு வருகிறது. இந்துக்களின் மனதை புண்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.
நமது பாரத பிரதமர் நம் நாட்டை முன்னேற்றி கொண்டு செல்கின்றார். ஒருமுறை பாஜகவிற்கு வாய்ப்பளித்து பாருங்கள் நிச்சயமாக தமிழ்நாட்டை முன்னேற்ற பாதையில் பாஜக அழைத்துச் செல்லும்'' என்றார்.
அவரைத்தொடர்ந்து பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் பேசுகையில், ''வேல் யாத்திரை எதிர்க்கட்சிகளுடைய தூக்கத்தை தொலைத்து இருக்கிறது. இந்த யாத்திரையை வருகின்ற டிசம்பர் 5ஆம் தேதியன்று திருச்செந்தூரில் நிறைவு செய்கிறோம்.
தமிழ் தமிழ் என்று பேசியவர்கள் அனைவரும் தமிழை பாதுகாத்தனரா? தமிழ் பண்பாட்டை காத்தனரா? இல்லை மாறாக அவர்கள் தான் தமிழ் கலாசாரத்தையும் தமிழ் பண்பாடுகளையும் சீர்குலைத்தனர்.
குறிப்பாக திமுகவினர், கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய கறுப்பர் கூட்டத்திற்குத் தக்க பாடத்தை புகட்டியே ஆகவேண்டும். ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு உதவிய கட்சி பாஜக.
பாரத பிரதமர் அனைத்து திட்டங்களையும் மக்களுக்கு கொண்டு போய் சேர்க்க செய்வோம். திமுக என்றாலே அனைத்திலும் ஊழல். வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கட்சியில் நாம் மாபெரும் அளவில் வெற்றி காண செய்வோம். மேலும் தைப்பூசத் திருநாளை விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்'' என்றார்.
இதையும் படிங்க:அதிமுகவுக்கு ஒரு நீதி, மற்ற கட்சிகளுக்கு ஒரு நீதியா' - உதயநிதி ஸ்டாலின்