கோயம்புத்தூர்:கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி நகராட்சியில் மொத்தமுள்ள 27 வார்டுகளில் திமுக 19 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் என திமுக கூட்டணி 21 வார்டுகளை கைப்பற்றியது. அதிமுகவும், சுயேச்சையும் தலா மூன்று இடங்களை கைப்பற்றினர். திமுக கூட்டணியில் கருமத்தம்பட்டி நகராட்சி தலைவர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு திமுக தலைமை ஒதுக்கியது.
இதையடுத்து, நகராட்சி தலைவருக்கான தேர்தலில் திமுகவைச் சேர்ந்த நித்யா மனோகரன் போட்டி வேட்பாளராக களம் இறங்கினார். 27 கவுன்சிலர்கள் கொண்ட கருமத்தம்பட்டி நகராட்சியில், திமுக மற்றும் திமுக ஆதரவு சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட 22 பேரின் வாக்குகள் பெற்று திமுகவைச் சேர்ந்த நித்யா நகராட்சி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பாலசுப்பிரமணியம் ஐந்து வாக்குகளை மட்டுமே பெற்றார். இதனால், அதிருப்தி அடைந்த காங்கிரஸ் நிர்வாகிகளுடன் திமுகவினர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், நகராட்சி துணைத்தலைவர் பதவியைக் காங்கிரஸ் கட்சிக்கு வழங்க திமுகவினர் ஒப்புக்கொண்டதால் சுமூகமான முடிவு எட்டப்பட்டது.