கோயம்புத்தூர்: திருமலையம்பாளையம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 8 இடங்களில் திமுகவும் 7 இடங்களில் அதிமுகவும் வெற்றி பெற்றன. கடந்த மார்ச் 4 ஆம் தேதி நடைபெற்ற பேரூராட்சித் தலைவர் மறைமுகத் தேர்தலில் திமுக கவுன்சிலர் கவிதா என்பவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தொடர்ந்து நடைபெற்ற துணைத் தலைவர் மறைமுகத் தேர்தலில் திமுக சார்பில் கோகிலா என்பவரும் அதிமுக சார்பில் கலைவாணி என்பவரும் போட்டியிட்டனர். இதில் திமுக கவுன்சிலர் ஒருவரின் வாக்கு செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதனால் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் தலா 7 வாக்குகள் பெற்றனர்.
இதனால் குலுக்கல் முறையில் துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அறிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், வாக்குச் சீட்டுக்களை கிழித்து வீசி ரகளையில் ஈடுபட்டனர்.