தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எஸ்.பி. வேலுமணி மீது சமூக வலைதளங்களில் அவதூறு: திமுக மாவட்ட பொறுப்பாளர் கைது - கோவை செய்திகள்

கோவை : புறநகர் திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், அவரது உதவியாளர் கீர்த்தி ஆனந்த் ஆகியோர் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை திமுக மாவட்ட பொறுப்பாளர் கைது
கோவை திமுக மாவட்ட பொறுப்பாளர் கோவை திமுக மாவட்ட பொறுப்பாளர் கைது கைது

By

Published : May 31, 2020, 3:26 PM IST

கடந்த 26ஆம் தேதி அன்று கிணத்துக்கடவை அடுத்த சிங்கையின்புதூர் பகுதியில் அதிக அளவில் கருங்கற்கள் ஏற்றிச் சென்ற லாரியால் பலத்த காயமடைந்த பழனிச்சாமிக்கு, அவ்வழியாகச் சென்ற திமுக மாவட்டப் பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் முதலுதவி அளித்தார்.

அப்போது அப்பகுதியிலிருந்து அதிக அளவு கனிம வளங்கள் கேரளாவிற்கு கடத்தப்பட்டு வருவதாகவும், அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகளால் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருவதாகவும், அப்பகுதி சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம் இவற்றையெல்லாம் கண்டுகொள்வதில்லை என்றும் சிங்கையின்புதூர் பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதனையடுத்து தென்றல் செல்வராஜ், சார் ஆட்சியருக்கும் காவல் துறையினருக்கும் தகவல் அளித்து, அதிக பாரம் ஏற்றி வந்த லாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டி கோரிக்கை வைத்தார். இதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாள்களில் வருவாய் துறையினர் அதிக பாரம் ஏற்றி வந்த லாரிகளின் மீது வழக்குப் பதிவு செய்ததில், சுமார் மூன்று லட்சம் ரூபாய்க்கும் மேல் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தன்னையும், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ். பி. வேலுமணியையும் சமூக வலைதளங்களில் தவறாக சித்தரிப்பதாகக் கூறி எட்டிமடை சண்முகம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததை அடுத்து, தென்றல் செல்வராஜ், அவரது உதவியாளர்கள்மீது காவல் துறையினர் இரு பிரிவுகளில் (IPC 154, 505)வழக்குப் பதிவு செய்தனர்.

மேலும், நேற்று காலை மூன்று மணியளவில் மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜின் உதவியாளர் கீர்த்தி ஆனந்தனின் வடசித்தூர் வீட்டிற்கு, ஐந்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் சென்று அவரது தாய், தந்தை, சகோதரர் ஆகியோரை தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதற்கு மாவட்ட பொறுப்பாளர் செல்வராஜ் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, நேற்று இரவு ஒன்பது மணியளவில் பொள்ளாச்சி குமரன் நகரில் உள்ள அவரது வீட்டில் வைத்து தென்றல் செல்வராஜையும், உதவியாளர் கீர்த்தி ஆனந்தையும் இரு பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் கைது செய்தனர்.

அப்போது திமுக கோவை மாநகர கிழக்கு மாவட்டப் பொறுப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக், மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் கிருஷ்ணன், கோவை மாநகர மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் முத்துசாமி, நகரக் கழக பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜன், வால்பாறை நகரப் பொறுப்பாளர் பால்பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் துரை, முகமது யாசின், மாவட்ட பிரதிநிதி அமுதபாரதி, நகரக் கழக செயலர் கார்த்திகேயன் உள்ளிட்ட கட்சியினர் அரசுக்கு எதிராகவும் ஆளுங்கட்சியினருக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர்.

தொடர்ந்து, பத்திரிகையாளர்களிடம் பேசிய கோவை மாநகர கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், சிங்கநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நா. கார்த்திக் ”எஸ். பி. வேலுமணி கோவை மாவட்டத்தில் திமுகவினர் மீது தொடர்ந்து பொய் வழக்குகள் தொடுத்து வருகிறார். அதில் ஒன்றாக புறநகர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், அவரது உதவியாளர்மீது இன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியின் 4000க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் மாநகராட்சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை.

மாவட்ட செயலாளர்கள் சி. ஆர். ராமச்சந்திரன், முத்துசாமி ஆகியோரைத் தொடர்ந்து, தென்றல் செல்வராஜ் மீது இன்று ஒரு பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ். பி. வேலுமணி பதில் சொல்ல வேண்டும். வேலுமணிக்கு எதிராக திராவிட முன்னேற்றக் கழகம் கரூர் அல்லது கோவையில் மிகப்பெரிய போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. இந்தக் கைது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது” எனத் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பேசிய தென்றல் செல்வராஜ், ”திமுகவை அடக்க நினைக்கும் எஸ். பி. வேலுமணியின் எண்ணம் நிறைவேறாது. திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மு.க. ஸ்டாலினை அரியணையில் ஏற்ற தொடர்ந்து போராடவிருக்கிறேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க :கோவை மண்ணின் குடிநீர் தேவையை அரசு பூர்த்தி செய்யவேண்டும் - சீமான் கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details