கோவையில் திராவிடன் அறக்கட்டளை சார்பில் 'நான், நீங்கள், நாம், எல்லோரும் திமுகவிற்கு வாக்களிப்போம் ஏன்?' என்ற புத்தக வெளியீடு அவிநாசி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா நூலை வெளியிட, திமுக சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆ. ராசா,"விவசாய கடன்களை ரத்து செய்ய வழக்கு தொடுத்த போது கடன்களை ரத்து செய்வது சாத்தியமில்லை என தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்தது.
இப்போது தேர்தல் நேரத்தில் ரத்து செய்ய திமுகவின் தேர்தல் அறிவிப்பு தான் காரணம். திமுக மதிக்கின்ற வகையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. இதற்கான முழு நற்பெயரும் திமுகவை சாரும். 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்த பின்பு வழங்கப்பட்டிருக்கின்றது.
திமுக கேட்கக்கூடியதை செய்யும் அரசாக தமிழ்நாடு அரசு இருக்கின்றது. அறிவிப்புகள் எதையும் அதிமுக அரசு சொந்த புத்தியால் செய்யவில்லை. திமுக தந்த புத்தியால் தான் செய்கிறது.
கோவையில் நான்கு முக்கிய சாலை திட்டங்களை மத்திய அரசு கோரியிருக்கின்றது. மத்திய பட்ஜெட் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பட்ஜெட். பாஜக எதை செய்தாலும் அதை வரவேற்கக்கூடிய அடிமைப் புத்தியை மனதில் வைத்திருக்கின்ற அரசாக தமிழ்நாடு அரசும், முதலமைச்சரும் இருக்கின்றனர்.
ஊழல் குற்றச்சாட்டுகள் எல்லா தலைவர்கள் மீதும் வைக்கப்படுவது இயற்கை. இதில் எதெல்லாம் நிரூபிக்கப்பட்டுள்ளது, ஊழல் குற்றச்சாட்டில் தண்டனை பெற்ற ஜெயலலிதா படத்தை வைத்துக்கொண்டு அரசு நடத்துகின்றோம் என்பது அரசியல் சட்டத்தை படுகொலை செய்வது போன்றது.
அமைச்சர் வேலுமணி மீது ஊழல் வழக்கு தொடரப்பட்டது. சிபிசிஐடி விசாரித்து அதில் எதுவும் இல்லை என நீதிமன்றத்தில் தெரிவித்தது. சிபிசிஐடி என்னென்ன விசாரணை செய்கிறது என்பதையும், சிபிசிஐடி தாக்கல் செய்த அறிக்கையையும் கேட்கின்றோம். சிபிசிஐடி அறிக்கையை நீதிமன்றம் உத்தரவிட்டும் ஒரு வருடமாக ஏன் திமுகவிற்கு கொடுக்க மறுக்கின்றனர்? என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து, 234 சட்டப்பேரவை உறுப்பினர்களும் சேர்ந்து நீட் வேண்டாம் என்று சொல்லி இருக்கின்றோம். இந்தத் தீர்மானத்தை ஏற்று அடுத்த கல்வியாண்டு முதல் நீட் தேர்வை ரத்து செய்கிறோம் என தமிழ்நாடு வரும் மோடி அறிவித்தால் நாங்கள் அவரை வரவேற்கத் தயார். பாஜக கூட்டணியை மக்கள் ஓட ஓட விரட்டுவார்கள். 200 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும். திமுக கூட்டணியில் தேமுதிக இணையும் என்பதை தலைமைதான் முடிவு செய்யும். 7 பேர் விடுதலையில் சட்டப்படி ஆளுநருக்கு தான் அதிகாரம் உள்ளது. அவருடன் அதிமுக அரசும் இணைந்து நாடகம் ஆடுவது தமிழ்நாட்டை வஞ்சிக்கிற செயல்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: நாங்கள் தொடர்ந்த வழக்குகளை எஸ். பி. வேலுமணி சந்திக்க தயாரா? ஆ. ராசா சவால்