கோயம்புத்தூர்: நண்பர்கள் விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டால் நாமும் பங்கேற்க வேண்டும் என்ற எண்ணம் வரும். ஆனால் சிலர் பயத்தின் காரணமாக, அந்த எண்ணத்தை தள்ளிவைத்து விடுவார்கள். இப்படி இருக்க எங்களுக்கு பயணம் உண்டு, பயம் இல்லை என்ற தொனியில் மாற்றுத்திறனாளி மாணவி செந்தமிழ் கோவையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு அசத்தியுள்ளார்.
கருமத்தம்பட்டி அருகே உள்ள கே.பி.ஆர் கல்வி குழுமங்கள் சார்பில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் மனநலம் பேணுதல் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் நேற்று (டிச. 4) நடைபெற்றது. 7 ஆவது ஆண்டாக நடத்தப்பட்ட மராத்தான் போட்டியில் 8 கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர் பிரிவுகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதில் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட 5 கிலோ மீட்டர் பிரிவில், செல்லப்பம்பாளையம் அரசு பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வரும் மாற்றுத்திறனாளி மாணவி செந்தமிழ் ஊன்று கோல் உதவியுடன் மாரத்தான் போட்டியில் கலந்துகொண்டார்.