கோயம்புத்தூர்: அடர்ந்த வனப்பகுதிக்குள் வாழக்கூடிய ஊன் உண்ணியான செந்நாய்கள் தனது கூட்டத்துடன் சேர்ந்து வாழக்கூடிய விலங்காகும். இரை தேடும்போது கூட்டத்துடன் சென்று வேட்டையாடுவதை செந்நாய்கள் வழக்கமாக கொண்டுள்ளன. செந்நாய்கள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியே வந்து வேட்டையாடுவது அண்மைக் காலமாக தொடர்ந்து வருகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு நீலகிரி மாவட்டம் உதகை அருகே வனப்பகுதியில் இருந்து கிராமத்துக்குள் புகுந்த செந்நாய்கள், ஏரியில் இருந்த மான்களை வேட்டையாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இந்நிலையில், வனப்பகுதியில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கோவை உக்கடம், பெரியகுளம் பகுதியில் செந்நாய் இருப்பதை பறவை ஆர்வலர் மோகன்ராஜ் தனது கேமராவில் பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பறவைகள் வலசை குறித்து ஆய்வு செய்து புகைப்படம் எடுத்து வருகிறேன். பெரியகுளத்தில் பறவைகளை படமெடுத்துக் கொண்டிருந்த போது வித்தியாசமாக ஒரு நாய் தென்பட்டது. அதனை உற்று நோக்கிய போது அதன் வால்பகுதி செந்நாய்க்கே உரித்தான கருப்பு நிற வாலை கொண்டிருந்தது. அருகில் சென்று பார்த்தபோது அது செந்நாய் என உறுதி செய்தேன். வனத்துறையினர் உக்கடம் பெரியகுளத்தில் ஆய்வு செய்து அங்கு செந்நாய் இருந்ததை உறுதிப்படுத்தினர்" என்றார்.