தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 9, 2023, 3:59 PM IST

Updated : Mar 9, 2023, 6:48 PM IST

ETV Bharat / state

"வடமாநில தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் ரோந்து சென்று பாதுகாப்பு"- டிஜிபி சைலேந்திர பாபு!

வடமாநில தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டுமெனவும், ரோந்து வாகனங்கள் சென்று கண்காணிக்க வேண்டுமெனவும் காவல் துறையினருக்கு அறிவுருத்தப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

செய்தியாளர்களைச் சந்தித்த சைலேந்திரபாபு

கோயம்புத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக கோவை சரகத்திற்கு உட்பட்ட தொழில் முனைவோர் மற்றும் தொழிலதிபர்களுடன் காவல் துறை அதிகாரிகள் கலந்துரையாடினர். இதில், தமிழ்நாடு காவல் துறை தலைவர் சைலேந்திர பாபு, டிஐஜி விஜயகுமார், மேற்கு மண்டல காவல் துறை தலைவர் சுதாகர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சைலேந்திரபாபு, "கோவை சரகத்திற்கு உட்பட்ட தொழிலதிபர்கள் மற்றும் தொழில் முனைவோர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் ஏற்பட்ட குழப்பத்தை நல்ல முறையில் கையாண்ட கோவை, திருப்பூர், ஈரோடு தொழில் முனைவோர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இவ்விவகாரத்தில் பத்திரிகையாளர்கள் நல்ல ஒத்துழைப்பு அளித்தனர்.

வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் ஏற்பட்ட பதட்டம் தனிந்துள்ளது. தற்போது சூழல் நன்றாக உள்ளது. இருந்தாலும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது. அதனால் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியுள்ளது. இவ்விவகாரத்தில் வதந்தி பரப்பியதாக 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் தொடர்புடைய ஒரு சிலர் தலைமறைவாக உள்ளனர். சிலர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

தற்போது வதந்தி குறைந்துள்ளது. பாட்னா, டெல்லி, போபால், பெங்களூரு ஆகிய இடங்களில் வதந்தி பரப்பியவர்களை கைது செய்ய தனிப்படை காவல் துறையினர் முகாமிட்டுள்ளனர். வடமாநில தொழிலாளர்களுடன் உரையாட வேண்டும் என தொழிலதிபர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. வடமாநில தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டுமெனவும், ரோந்து வாகனங்கள் சென்று கண்காணிக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பீகார், ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பெற்றோர்களிடம் பயம் உள்ளது. அதனை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஏன் பொய்யான செய்திகளை பரப்பினார்கள் என்பது குறித்து கைது செய்யப்பட்டவர்களிடம் புலன் விசாரணை நடத்தப்படும். தமிழ்நாட்டிற்கு சம்பந்தம் இல்லாத செய்திகளை பரப்பியுள்ளனர். தாம்பரத்தில் ஒரு வடமாநில தொழிலாளி அடிபட்டு கிடப்பது போல பதட்டமான வீடியோ வெளியானது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. வதந்தி பரப்பிய ஒரு சிலருக்கு அரசியல் கட்சி தொடர்பு இருக்கிறது. அது புலன் விசாரணையில் தெரியவரும்.

ஹோலி பண்டிகைக்கு நிறைய பேர் முன்பதிவு செய்து வடமாநிலங்களுக்கு சென்றனர். ஒரு சிலர் பயத்தில் சென்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் 10 லட்சம் பேர் இருக்கலாம். ரயில் நிலையங்கள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. வதந்தி பரவினால் பிற மாநில அதிகாரிகள் தொடர்பு கொள்ள நோடல் ஆபிசர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்" என தெரிவித்தார்.

தொடர்ந்து, ரவுடிகள் மீதான துப்பாக்கி சூடு குறித்த கேள்விக்கு, "கடந்த 10 ஆண்டுகளில் பல காவல் துறையினர் கொலை செய்யப்பட்டுள்ளனர். ரவுடிகளை பிடிப்பதை கள நிலவரத்திற்கு ஏற்ப தான் முடிவு செய்ய வேண்டும். குற்றவாளிகளை பிடிக்கும் போது சில நேரங்களில் துப்பாக்கி பிரயோகம் செய்ய வேண்டியிருக்கும். காவல் துறையினரை துப்பாக்கி பயன்படுத்தாதீர்கள் என சொல்ல முடியாது" என தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், "குற்றம் புரிய சோசியல் மீடியா பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும். gpay மூலம் வங்கி கணக்கிற்கு பணத்தை தவறுதலாக அனுப்பியதாக கூறி, லிங்க் அனுப்பி திருப்பி அனுப்புமாறு கேட்கிறார்கள். அந்த லிங்க்கில் பணத்தை அனுப்பாதீர்கள். வங்கி மொத்த கணக்கை ஹேக் செய்து பணத்தை எடுத்து விடுவார்கள். இதுபோல தொடர்பு கொண்டால் அந்த எண்ணை பிளாக் பண்ணுங்கள். காவல் துறையினரிடம் புகார் தெரிவியுங்கள். OTP யை ஷேர் செய்யாதீர்கள். மின் கட்டணம், ஆதார் கார்டு என சீசனுக்கு ஏற்ப மோசடி செய்கிறார்கள். மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்" என்று கூறினார்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் வாழும் பிற மாநிலத்தவர் விவரங்களை சேகரிக்க டிஜிபி உத்தரவு

Last Updated : Mar 9, 2023, 6:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details