தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொழில் பூங்கா விவகாரம் - நீலகிரி எம்.பி.ஆ. ராசா விவசாயிகளுடன் பேச்சு... போராட்டம் நிறுத்திவைப்பு

கோவையில் அமைக்கப்படும் தொழில் பூங்கா விவகாரத்தில் நீலகிரி எம்.பி. ஆ.ராசா விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

தொழில் பூங்கா விவகாரம்-எம்.பி ஆ.ராசா விளக்கம்
தொழில் பூங்கா விவகாரம்-எம்.பி ஆ.ராசா விளக்கம்

By

Published : Dec 18, 2022, 8:29 PM IST

தொழில் பூங்கா விவகாரம்-எம்.பி ஆ.ராசா விளக்கம்

கோவைஅருகேஅன்னூர் தாலுகாவில் நான்கு ஊராட்சிகளிலும், மேட்டுப்பாளையம் தாலுகாவில் இரண்டு ஊராட்சிகளிலும் என 6 ஊராட்சிகளில், 3,862 ஏக்கரில் தொழில் பூங்கா அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு கடந்த அக்டோபரில் அறிவித்தது.

எனவே, இந்நிலையில், நீலகிரி எம்.பி. ஆ.ராசா மற்றும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவில் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான 1,630 ஏக்கரில் மட்டும் தொழில் பூங்கா அமைக்கப்படும் என்றும்; விவசாயிகளின் நிலம் கையகப்படுத்தப்பட மாட்டாது எனவும் தமிழ்நாடு அரசு இரண்டு நாட்களுக்கு முன் அறிவித்தது.

இந்நிலையில் இது குறித்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த நீலகிரி எம்.பி. ஆ.ராசா இன்று குப்பனூர் ஊராட்சி, குழியூர்- கோவில் மண்டபத்திற்கு வந்தார். எம்.பி ஆ.ராசா, கோவை வடக்கு ஆர்டிஓ பூமா, அன்னூர் தாசில்தார் தங்கராஜ், மேட்டுப்பாளையம் தாசில்தார் மாலதி, போராட்டக் குழுத் தலைவர் குமார ரவிக்குமார், செயலாளர் ஏ.வி ராஜா ஆகியோர் தனியாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு நீலகிரி எம்.பி. ஆ.ராசா பேசுகையில், ’பேச்சுவார்த்தையின்போது அரசு அறிவித்த 1,630 ஏக்கருக்கு பதில், 800 முதல் 900 ஏக்கர் மட்டுமே தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமாக உள்ளதாக போராட்டக் குழுவினர் தெரிவித்தனர். இது குறித்து ஆர்டிஓ விசாரிப்பதாக, ஆய்வு செய்து தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

எனினும், இந்தப் பகுதியில் எந்த விவசாயி நிலமும் கையகப்படுத்தப்படமாட்டாது என பேச்சுவார்த்தையில் உறுதியளிக்கப்பட்டது. தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான நிலத்தில், எந்த தொழிற்சாலை அமையும் என்பது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் 15 பேர் கொண்ட குழு அமைக்கப்படும்.

இந்தப் போராட்டக் குழு சார்பில் ஐந்து பேரும், மற்றொரு போராட்டக் குழு சார்பில் இருவரும், எம்.பி, எம்.எல்.ஏ, சேர்மன் ஆகியோர் அடங்கிய பதினைந்து பேர் குழு அந்த தொழிற்சாலையின் விண்ணப்பத்தைப் பெற்று, அது மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலையா? இல்லையா? என்பதை ஆய்வு செய்து இந்த தொழிற்சாலையால் பிரச்னை இல்லை என உறுதி செய்த பிறகு, அந்த தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கப்படும்.

எந்த பிரச்னையும் இல்லாத தொழிற்சாலை சரியான நிறுவனத்தில் அமைக்க ஒத்துழைப்புத் தர வேண்டும். விவசாயத்தையே நம்பி நீண்ட நாட்கள் இருக்க முடியாது. தொழில் வளர்ச்சி இருந்தால்தான் நமது பிள்ளைகளுக்கு, வேலை வாய்ப்பு கிடைக்கும். இன்னும் ஒரு வாரத்திற்குள் டிட்கோ சேர்மனை அழைத்து வந்து, மீண்டும் போராட்டக் குழுவுடன் பேச நடவடிக்கை எடுக்கப்படும்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.

போராட்டக்குழுத் தலைவர் ரவிக்குமார் கூறுகையில், "அரசு தரப்பில் 1,630 ஏக்கர் தனியார் கம்பெனி நிலம் உள்ளதாக கூறினர். ஆனால், 815 ஏக்கர் நிலம் தான் உள்ளது. அதுவும் 86 இடங்களில் பிரிந்து உள்ளது. எனவே அங்கு தொழிற்சாலை அமைப்பதில் பல்வேறு சிரமங்கள் இருக்கின்றன என்பதை எம்.பி ஆ.ராசாவிடமும், ஆர்டிஓ-விடமும் எடுத்துக் கூறினோம். இது குறித்து விசாரிப்பதாக தெரிவித்தனர்.

மேலும் டிட்கோ சேர்மன் ஒரு வாரத்திற்குள் வந்து நம்மிடம் பேசுவதாக கூறியுள்ளனர். எனவே, அதுவரை போராட்டம் நிறுத்தி வைக்கப்படுகிறது. டிட்கோ சேர்மன் வந்து ஆய்வு செய்த பிறகு 86 இடங்களில் பிரிந்து உள்ள நிலங்களில், தொழிற்சாலை அமைப்பதற்கு வாய்ப்பே இல்லை. எனவே, டிட்கோவும், அரசும் தாங்களாகவே தொழில் பூங்கா அமைப்பதை கைவிட்டுவிடுவார்கள் என்று உறுதியாக நம்புகிறோம்’ எனத் தெரிவித்தார்.

கூட்டத்தில் வடக்கு வருவாய் கோட்டாட்சியர் பூமா, தாசில்தார்கள் தங்கராஜ், மாலதி, துணை தாசில்தார்கள், மேட்டுப்பாளையம் போலீஸ் டிஎஸ்பி பாலாஜி, உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். குழு அமைத்த பின்பும், குழுவின் அனுமதி வழங்கிய பிறகும்தான் தொழிற்சாலைகள் செயல்படும் என்று கூறியதற்காகவும், பேச்சுவார்த்தைக்கு வந்ததற்காகவும் நீலகிரி எம்.பி. ஆ.ராசாவுக்கு போராட்டக் குழுவினர் நன்றி தெரிவித்தனர்.

இதையும் படிங்க:'பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்' அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details