கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளச்சியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் பொள்ளாச்சி ஜெயராமன் சார் ஆட்சியர் வைத்தியநாதனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, கடந்த பத்து ஆண்டுகளாக பொள்ளாச்சியில் எண்ணற்ற திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டுள்ளது. புதிதாக அரசு கலைக்கல்லூரி கொண்டு வரப்பட்டுள்ளது.
திமுக பொய்யான வாக்குறுதி கூறி மக்களை ஏமாற்றுகிறது - பொள்ளாச்சி ஜெயராமன்
கோயம்புத்தூர்: அதிமுக ஆட்சியில் பத்து ஆண்டுகளாக செய்த நலத்திட்டகளை மக்களிடையே எடுத்துக்கூறி வாக்கு சேகரிப்போம் என பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் - பொள்ளாச்சி - பழனி வரை சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. பொள்ளாச்சி பகுதியில் சுற்றி புறவழிச்சாலை அமைக்கும் பணி தற்சமயம் 70 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம், தாசில்தார் அலுவலகம், நீதிமன்ற கட்டிடம் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. பொள்ளாச்சி நகர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவடையும் நிலையில் உள்ளது.
இதுபோன்ற எண்ணற்ற திட்டங்கள் பொது மக்களுக்கு கடந்த 10 ஆண்டு காலமாக அதிமுக ஆட்சியில் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்களை எடுத்துக்கூறி பொதுமக்களிடையே வாக்கு சேகரிப்போம். திமுக ஆட்சியில் எந்த ஒரு மக்கள் நல திட்டங்களும் செயல்படுத்தவில்லை. அவர்கள் பொய்யான வாக்குறுதிகளை கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர் என்று கூறினார்.