கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு தாலுகா கோதவாடி குளத்தைப் புனரமைக்கும் பணியை சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் இன்று (அக். 27) தொடங்கிவைத்தார்.
சுமார் 312 ஏக்கர் பரப்பளவில் இக்குளம் பரவிக் காணப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இக்குளம் தூர்வாரப்பட்டது. பின்னர் அதிகளவு தண்ணீர் தேங்காததால் கவனிப்பாரற்று விடப்பட்டது. தற்போது இந்தக் குளப்பகுதி முழுவதும் முள்புதர்கள் அடர்ந்து காணப்படுகின்றன.
தற்போது கெளவுசிகா நதி பாதுகாப்பு அமைப்பு, தன்னார்வ அமைப்புகள், விவசாயிகள், பொதுமக்கள் பங்களிப்புடன் இந்தக் குளத்தில் உள்ள முள்புதர்களை அகற்ற முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து இன்று இக்குளத்தின் புனரமைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தன்னார்வலர்கள், விவசாயிகள், பொதுமக்கள் தகுந்த இடைவெளியை பின்பற்றி விழாவில் கலந்துகொண்டனர்.
இரண்டு ஆண்டுக்குள் கோதவாடி குளம் பகுதியில் உள்ள அனைத்து முள்புதர்களும் அகற்றப்பட்டு குளத்தில் தண்ணீர் தேங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கோதவாடி குளம் புனரமைப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர்.