இந்திய பல் மருத்துவ சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் இன்று பொள்ளாச்சியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பல் மருத்துவ சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து பல் மருத்துவ சங்கத்தின் மாநிலத் தலைவர் அருண் குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது,
தமிழ்நாட்டில் பல் மருத்துவக் கல்லூரி ஒன்று மட்டும் செயல்பட்டு வருகிறது. மேலும், பல் மருத்துவக் கல்லூரி கொண்டுவரப்படும் என அரசு அறிவித்து இரண்டு ஆண்டுகள் ஆகியும், இதுவரை அரசு எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. வரும் கல்வியாண்டில் பல் மருத்துவக் கல்லூரியை கொண்டுவர வேண்டும்.
அதேபோல், பல் மருத்துவமனைக்கு ஆய்வுக்காக வரும் மருத்துவர்கள், ஆயுர்வேதம் போன்ற வேறு மருத்துவ துறையை சார்ந்தவர்களாக இருப்பதால், பல் மருத்துவத் துறையில் இருக்கும் பிரச்னைகள் குறித்து அவர்களுக்கு முறையாகத் தெரிவதில்லை. இதனால் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருகிறோம். எனவே, மருத்துவமனை பாதுகாப்புச் சட்டத்தில் இந்திய பல் மருத்துவ சங்கத்திற்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும்.
இது குறித்து பல முறை சுகாதாரத்துறை அமைச்சர், முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் 390 பல் மருத்துவர்கள் தற்காலிக மருத்துவர்களாக பணியாற்றி வருகிறார்கள். அவர்களை நிரந்தரமாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.