கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, ஆகியவற்றை கண்டித்து தமிழ் மாநில காங்கிரஸ் கோவை மாவட்ட இளைஞரணி சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு திமுக அரசை கண்டித்து பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணித் தலைவர் யுவராஜா, "வருகின்ற நாட்களில் கொங்கு மண்டலத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க உள்ளோம். திமுக அரசு பொய்யான வாக்குறுதிகளால் தற்பொழுது ஆட்சிக்கு வந்துள்ளது. குறிப்பாக நீட் தேர்வு ரத்து, குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, மாணவர்களின் கல்விக் கடன் ரத்து, விவசாயக் கடன்கள் தள்ளுபடி போன்ற பல்வேறு வாக்குறுதிகளை அளித்த நிலையில் 99 சதவிகிதம் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை.
தற்பொழுது தமிழ்நாட்டில் உள்ள ஆட்சியாளர்களைப் பொருத்தவரை எப்படி சம்பாதித்துக் கொள்ளலாம், எப்படி எதிர்க்கட்சிகளை அடக்கலாம் என்ற நோக்கில் தான் செயல்பட்டு வருகிறார்கள். இந்த 18 மாதங்களில் ஒரு குடும்பத்திலிருந்து ரூ.3000 பொதுமக்களிடமிருந்து சுரண்டுகின்ற அரசாக இந்த அரசு உள்ளது
பாஜக மாநிலத் தலைவர், அண்ணாமலை ரூ.3 1/2 லட்சம் வாட்ச் கட்டினால் என்ன? ரூ.5 லட்சம் வாட்ச் கட்டினால் என்ன? என்று கேள்வி எழுப்பிய அமைச்சர் செந்தில் பாலாஜி, தற்பொழுது உள்ள பல்வேறு விலை உயர்வை மறைப்பதற்காகவே இவ்வாறு பேசி வருகிறார்.