கோயம்புத்தூர்:செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய கோரியும், திமுக அரசைக் கண்டித்தும் அதிமுக சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பாக அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மதுவிலக்கு மற்றும் மின்சார துறை அமைச்சராக இருந்து தற்போது இலாக்கா இல்லாத அமைச்சராக இருக்கக்கூடிய செந்தில் பாலாஜியை பதவி விலக கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட குடிநீர் திட்டம், சாலை பணிகள், மேம்பால பணிகள் எல்லாம் முடிக்காமல் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மேலும், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறிய முப்பதாயிரம் கோடி ஊழல் குறித்து விசாரணை நடத்த கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அது மட்டுமின்றி கோவை மாவட்டத்தில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், கேரளாவில் அணை கட்டி வரும் கேரள அரசை தடுக்காமல் உள்ள திமுக அரசை கண்டித்தும், கனிம வளங்கள் கடத்தலை தடுத்து நிறுத்த கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எஸ்.பி. வேலுமணி, "அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை தான் தற்போதைய முதல்வர் திறந்து வைத்து வருகிறார். இந்த ஆட்சி உடனடியாக வீட்டிற்கு செல்ல வேண்டும். 7.5% இட ஒதுக்கீடு கொடுத்து மருத்துவ மாணவர்கள் 600 க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவராக வாய்ப்பு தந்த எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வரவேண்டும் என ஒட்டுமொத்த மக்களும் முடிவு செய்துவிட்டார்கள்.
உச்சநீதிமன்ற உத்தரவின் படி அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து உள்ளது. இதனை உடனடியாக மத்திய அரசின் பழி வாங்கும் நடவடிக்கை என கூறுகிறது. முதலமைச்சரின் குடும்பம் அனைவரும் செந்தில் பாலாஜி இருக்கும் மருத்துவமனையில் தான் உள்ளார்கள். அவர் ஏதேனும் கூறி விடுவாரோ என்ற பயத்தில் தான் அனைவரும் அங்கு சென்று கொண்டிருக்கிறார்கள்”, என விமர்சித்து உள்ளார்.