கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட சுகுணாபுரம், மயில்கல் பகுதியில், கடந்த முறை தேர்தலில் வாக்களித்தவர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் ராஜ்குமார் கூறுகையில், "மைல்கல் பகுதியில் 800க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இதில் மாநகராட்சி துவக்கப்பள்ளி சுகுனாபுரம் மேற்கு பகுதியில் உள்ள வாக்கு சாவடி எண் 255ல் 150க்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த தேர்தலில் வாக்களித்த நிலையில், தற்போது வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. தனது குடும்பத்தில் மனைவி, மகள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. இது குறித்து முறையிட்டும், எந்த தீர்வும் எட்டப்படவில்லை.
சந்தேகத்தை எழுப்பும் 150க்கும் மேற்பட்ட வாக்காளர் பெயர்கள் நீக்கம் மேலும், விடுபட்டவர்களின் பெயரை சேர்க்க தனி விண்ணப்பம் கொண்டு வந்தனர். அதில் உங்களுடைய வாக்கு அதிமுகவிற்கா? திமுகவிற்கா? நடுநிலையா? என கேட்கப்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம் என கேள்வி எழுப்பினார்.
ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயர்ந்தால் கூட வாக்காளர்பட்டியலில் டிரான்ஸ்பர் என்று தான் குறிப்பிடப்பட்டிருக்கும். இறந்தவர்களின் பெயர் தான் நீக்கம் என குறிப்பிடப்பட்டிருக்கும். தங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் உயிருடன் உள்ள நிலையில், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
இதில் தேர்தல் அலுவலரான மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு, நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்களின் உண்மை தன்மை கண்டறிந்து, உடனடியாக வாக்கு அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார். அமைச்சர் வசிக்கக்கூடிய பகுதியில் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதாக திமுகவினர் தெரிவிததுள்ளனர்.