கோவை:தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தமிழ் மொழியில் திருக்குடமுழுக்கு நடத்துவதற்கான அரசாணையைப் பிறப்பிக்கும்படி தெய்வீக பேரவை சார்பில் முதலமைச்சருக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அவர்கள் அனுப்பியுள்ள கடிதத்தில், "தமிழகத்தில் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் கீழ் பல்வேறு சைவ, வைணவ திருமடங்கள் கீழும் அறக்கட்டளைகள் மற்றும் தனியார் மூலமும் ஆயிரக்கணக்கான திருக்கோயில்கள் உள்ளன.
தமிழகத்தில் வழிபாடு நடைபெற்று வரும் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் கீழ் உள்ள கோயில்களும், திருமடங்கள் மூலம் நிர்வகிக்கப்படும் கோயில்களும் பெரும் பகுதி புராண காலங்கள் மற்றும் பண்டைய தமிழ் மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது. பண்டைய காலங்களில் கோயில்களின் குடமுழுக்கு, விழாக்கள், பெரு விழாக்கள் அனைத்தும் தமிழ் முறைப்படி நடைபெற்று வந்துள்ளது.
தமிழ் மன்னர்களின் ஆட்சிக் காலத்திற்குப் பிறகு வந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் தான் சமஸ்கிருதத்தை வழிபாட்டு மொழியாகச் சிறிது சிறிதாக மாற்றியுள்ளனர். தஞ்சை பெரிய கோயில், கங்கைகொண்ட சோழபுரம் போன்ற திருக்கோயில்களில் வடமொழி வழிபாடுகளோ அல்லது பிறமொழி வழிபாடுகளோ நடைபெற்றதாக எவ்வித சரித்திர குறிப்புகளும் இல்லை.
மேலும் கோயில்களின் குடமுழுக்கு விழாக்களும் சைவப் பெருந்தகையால் நடைபெற்றதாகத்தான் சான்றுகள் தெரிவிக்கின்றன. கருவூர்த் தேவர், நம்பியாண்டார் நம்பி போன்ற சைவப் பெருமக்கள் வடமொழியில் குடமுழுக்கு நடத்தியதாக எவ்வித சான்றுகளும் இல்லை. அதேசமயம் வைணவ திருத்தலமாக விளங்கும் திருமலை திருப்பதியிலும் இன்றுவரை நாலாயிரத்திவ்ய பிரபஞ்சம் தான் வழிபாட்டு பாடலாக உள்ளது.
பல்வேறு மன்னர்களின் படையெடுப்பில் ஊடுருவிய ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் வடமொழியைத் தெய்வ மொழி என்றும் இறைவன் மொழி என்றும் தவறாகச் சித்தரித்து வடமொழியின் ஆதிக்கத்தையும் ஆளுமையும் முன்னெடுத்து விட்டனர். திருக்குட நீராட்டு வழிபாடுகள், தமிழில் நடைபெறுமானால் பாமர மக்களும் வழிபாடுகளில் தங்களை முழுமையாக அர்ப்பணிக்க வாய்ப்பு அமையும். எனவே சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தமிழக கோயில்களில் திருக்குடமுழுக்கு விழாவை தமிழ் மொழியில் நடத்துவதற்கான வழிகாட்டுதலை வழங்கியுள்ள நிலையில் தமிழக முதலமைச்சர் தமிழ் மொழியில் தமிழக கோயில்களில் திருக்குடமுழுக்கு நடத்துவதற்குத் தகுந்த வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் தகுந்த அரசாணையையும் பிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரவுடி சஞ்சய் ராஜா மீது துப்பாக்கிச்சூடு: விசாரணை நடத்தக்கோரி நீதிமன்றத்தில் மனு!=