செவிலியரின் சேவையைப் போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மே 12ஆம் தேதி, 'சர்வதேச செவிலியர் தினம்' கொண்டாடப்படுகிறது. தற்போதைய சூழலில், கரோனாவுக்கு எதிரான மனித குலத்தின் போராட்டத்தில் முன்களப் பணியாளர்களாக, முன்நிற்கும் செவிலியரின் சேவை அளப்பெரியது.
மண்ணில் உலவும் தேவதைகளான செவிலியரையும் அவர்களின் அப்பழுக்கற்ற சேவையையும் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
செவிலியருக்கு இஎஸ்ஐ அரசு மருத்துவமனை முதல்வரின் மரியாதை கோவையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் முக்கிய மருத்துவமனையான இஎஸ்ஐ அரசு மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. அப்போது நவீன தாதியலின் நிறுவனரான புளோரன்ஸ் நைட்டிங்கேலின் உருவப்படத்துக்கு மருத்துவமனை முதல்வர் ரவீந்திரன் உள்ளிட்டோர் மலர்த் தூவி மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து செவிலியரிடையே பேசிய மருத்துவமனை முதல்வர், "மருத்துவர்கள் இடும் கட்டளைகளையும் அறிவுரைகளையும் ஏற்று பெருந்தொற்றில் பாதிக்கப்பட்ட நோயாளிகளை அருகில் சென்று அணுகும் செவிலியர் அனைவரும் போற்றுதலுக்குரியவர்கள்" என்று பெருமையுடன் தெரிவித்தார்.
கண்ணீர் சிந்திய மருத்துவமனை முதல்வர் ரவீந்திரன் மேலும் கரோனா சிகிச்சைப் பிரிவில் பணிபுரியும் செவிலியரின் கால்களில் விழுந்து, 'நீங்கள் தான் தற்போதைய சூழலில் கடவுள்' எனக் கூறி அழுது கண்ணீர் விட்டார். இந்தச் சம்பவம் அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.