கோவை மாவட்டத்தில் இன்று பல்வேறு இடங்களில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இன்று மதியம் முதல் கோவையில் கணுவாய், துடியலூர், காந்திபுரம், பேரூர், உக்கடம் போன்ற பகுதிகளில் சூரைக் காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் கோவை டவுன் ஹால் சிக்னலில் உள்ள மின் கம்பம் ஒன்று சாய்ந்தது. இதையடுத்து அங்கு போக்குவரத்து தடை ஏற்பட்டது. இதேபோல் உக்கடம் குளத்தைச் சுற்றி கம்பியால் போடப்பட்டிருக்கும் தடுப்பும் கீழே சாய்ந்தது.
பவர் ஹவுஸ் பகுதியில் சாலையோர மரம் ஒன்று சாய்ந்ததில் சாலை ஓரங்களில் நிற்க வைக்கப்பட்டிருந்த இரண்டு வாகனங்கள் சேதமடைந்தன. அதே போல் லாரி பேட்டையில் நாளை முதல் காய்கறி சந்தைகள் நடத்த போடப்பட்டிருந்த கூடங்களும் விழுந்தன. சுந்தராபுரத்தில் இருந்து போத்தனூர் செல்லும் சாலையில் மரம் சாய்ந்ததால் அப்பகுதியில் போக்குவரத்தும் மின்சாரமும் தடைப்பட்டது.