கரோனா காரணமாக நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் மாநில எல்லைகள் மூடப்பட்டு, போக்குவரத்து வசதிகள் நிறுத்தப்பட்டுள்ளன. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வேளியே வந்து செல்கின்றனர். இதனால், சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பல ஆயிரம் கிலோ மீட்டர் நடந்தே செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரு சில இடங்களில் நகர்ப்புறங்களில் பசிக்கொடுமையால் சிக்கித் தவித்து இறப்பதை விட சொந்த ஊருக்குச் சென்றுவிடலாம் என்று எண்ணி நடந்தே செல்கின்றனர். அந்தவகையில், உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் பகுதியைச் சேர்ந்த ஜியேந்தர சிங், மோகன் சர்மா, அஜித் சிங், தேவேந்திர சிங் ஆகியோர் சைக்கிளிலேயே சொந்த ஊருக்குச் செல்ல தயாராகியுள்ளனர்.
கேரள மாநிலம் சாலக்குடி பகுதியில் கல்லுடைக்கும் தொழிலாளர்களாக பணியாற்றி வந்த நான்கு பேரும், கடந்த ஒரு மாதமாக எந்தவொரு வேலையுமில்லாமல் வருமானமின்றி பசியுடனேயே நாட்களைக் கடத்தியுள்ளனர். வீட்டு வாடகை கொடுப்பதற்கும், ஒரு வேளை சாப்பாட்டிற்கும் கூட பணமில்லாததால் நான்கு பேரும் ஊர் திரும்ப முடிவு செய்தனர்.