கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் அறிவுரைப்படி, 'காவல்துறை - பொதுமக்கள் நல்லுறவை வளர்க்கவும், போதைப்பொருட்களை ஒழிக்கவும் மற்றும் போக்குவரத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கோவை மாநகர காவல் துறையும் தனியார் நிறுவனமும் இணைந்து கிரிக்கெட் போட்டியை நடத்தியது. இப்போட்டிகள் கடந்த 1ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது.
இந்தப்போட்டியில் பொதுமக்கள் சார்பில் 32 அணிகள், கோவை மாநகர காவல்துறை சார்பில் ஏழு அணிகள், கோவை மாநகர ஊர்க்காவல் படை சார்பில் இரண்டு அணிகள், கோவை மாநகர காவல் அலுவலக அமைச்சு பணியாளர்கள் சார்பில் ஒரு அணி, கோவை மாவட்ட காவல்துறை சார்பில் இரண்டு அணிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் ஒரு அணி மற்றும் மாநகராட்சி அலுவலகம் சார்பில் மூன்று அணிகளும் பங்கு பெற்று விளையாடின.
இந்த நிலையில் இதன் இறுதிப்போட்டி நேற்று (அக் 9) பிஎஸ்ஜி கல்லூரி ஐஎம்எஸ் ‘ஏ’ மைதானத்தில் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பிரிவில் வென்ற என்எம்எஸ் குளோபல் அணியும் காவல் துறை அணியும் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த காவல் துறை அணி, நிர்ணயிக்கப்பட்ட எட்டு ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 59 ரன்கள் எடுத்திருந்தது.
இதன்பின்னர் விளையாடிய பொதுமக்கள் அணி 6.1 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 61 ரன்கள் எடுத்து, எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. தொடர்ந்து வெற்றி பெற்ற என்எம்எஸ் குளோபல் அணிக்கு 25,000 ரூபாய் மற்றும் வெற்றிக்கோப்பையை கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் வழங்கினார்.