கோவையில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கோவை மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர் நடராஜன், கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் தனது வாழ்க்கை பதிவு செய்தார்.
பின்னர் வெளியே வந்த பி.ஆர்.நடராஜன், செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஜனநாயக நாட்டில் நடக்கும் தேர்தல் திருவிழாவில் அனைத்து வாக்காளர்களும் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும். இந்த தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்கும் இளைஞர்கள், நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும். யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் விவிபேட் கொண்டு வந்தது வரவேற்கத்தக்கது. பாஜகவின் கடந்த 5 ஆண்டு ஆட்சியில் தமிழக மக்களுக்கு இழைக்கப்பட்ட விரோதத்தையும், உரிமையை பறித்தத்தையும் நன்கு பரிசீலித்து வாக்களிக்க வேண்டும். பாஜக ஆட்சியை அப்புறப்படுத்துவதற்காக திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்" என்றார்.
தேர்தலில் வாக்களித்து வெளியே வந்த அவர், தேர்தல் விதியை மீறி பாஜக ஆட்சிக்கு வாக்களிக்காதீர்கள். திமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று வாக்குச்சாவடி மைய வளாகத்தில் செய்தியாளர்களிடையே பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பி.ஆர்.நடராஜ் வாக்குப்பதிவு கோவை மக்களவைத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கல்யாண சுந்தரம், வரதராஜபுரம் மேல்நிலைப்பள்ளியில் வாக்களித்தார். அதிமுக-பாஜக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், திருப்பூரில் வாக்களித்தார். மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மகேந்திரன், பொள்ளாச்சியில் வாக்களித்தார். மேலும், கோவையை அதிமுக அமைச்சர் எஸ்பி வேலுமணி, குனியமுத்தூர் அடுத்த சுகுணாபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்களித்தார். பாஜக கட்சியை சேர்ந்த வானதி சீனிவாசன், காந்திபுரம், டாடாபாத்தில் உள்ள காமராஜர் மெட்ரிக் பள்ளியில் வாக்களித்தார். கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வாக்களித்தார். இதேபோன்று, பல்வேறு அரசியல் மற்றும் தொழில் பிரபலங்கள், தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.