கோவை: ஈஷா யோகா பயிற்சிக்கு வந்த இளம்பெண் உயிரிழந்த வழக்கில் கோவை போலீசார் ஈஷா யோக மையத்தின் மீது மென்மையான போக்கைக் கையாள்வதாகவும், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிசன் அமைத்து ஈஷாவை விசாரிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
ஈஷா யோகா மையத்தில் நிகழும் குற்றங்கள்:பூமார்க்கெட் அருகே உள்ள ஜீவா இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இன்று (ஜன.4) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'கோவையில் இயங்கும் ஈஷா யோக மையத்தின் (Isha Foundation) மீது தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளதாகவும், ஜக்கி வாசுதேவின் (Jaggi Vasudev) மனைவி மரணமே மர்மம் தான் எனவும், ஈஷா மையத்தின் மீது பயிற்சிக்கு வந்தவர்களுக்குச் சந்நியாசம், நில அபகரிப்பு, குழந்தைகளுக்குப் போதை என தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
ஜக்கி வாசுதேவை கைது செய்க:இந்நிலையில் ஈஷாவில் பயிற்சிக்கு வந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண், கடந்தாண்டு டிச.18 ஆம் தேதி மாயமான நிலையில், அவர் சிலரிடமிருந்து தப்பியோடிய சிசிடிவி காட்சிகள் வெளியானது. கடந்த ஜன.1 ஆம் தேதி கிணற்றில் இருந்து சுபஸ்ரீ உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டு விடுமுறை தினத்தில் பிரேத பரிசோதனை நடந்துள்ளது எனத் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து, சுபஸ்ரீயின் கணவரை அழைத்து ஜக்கி வாசுதேவ் உட்பட ஈஷா அமைப்பினர் பேசியுள்ளனர் எனக்கூறிய அவர், இதில் பல்வேறு சர்ச்சைகள் உள்ளதாகவும் தெரிவித்தார்.
ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை:ஈஷா நிகழ்வில் பிரதமர் கலந்துகொள்வது மரபு அல்ல எனவும் நேரு ஆட்சிக்காலத்தில் எந்த மத நிகழ்விலும் அவர் பங்கேற்கவில்லை எனவும் கூறினார். ஆனால், பாஜக தேசிய தலைவர் வந்து செல்கிறார்; ஒன்றிய அரசுடன் செல்வாக்கான இணக்கம் உள்ள அமைப்பில் நடந்துள்ள மரணம் தொடர்பாக காவல்துறை மென்மை போக்கை கடைபிடிக்கிறது. எனவே, ஈஷா மையத்தை மூடிவிட்டு ஜக்கி வாசுதேவ் சாமியாரை ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் காவல்துறை நேரடியாக விசாரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.