கோவை : அன்னூரை அடுத்துள்ள நாகம்மாபுதூர் பகுதியை சேர்ந்தவர் சரவண சுந்தரம் (19). இவர் சீட்டு நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதேபோல பிள்ளையப்பம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் என்கிற பகவான்ஜி (26). சொந்தமாக ஆட்டோ வைத்து கரியாம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.
இவரது நண்பர் ராஜராஜன் (20). இந்நிலையில் சரவண சுந்தரத்திற்கும், தமிழ்ச்செல்வத்திற்கும் கொடுக்கல், வாங்கலில் ஏற்கனவே தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் இன்று காலை அன்னூரை அடுத்துள்ள மைல்கல் பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்த சரவண சுந்தரத்தை தமிழ்ச்செல்வன், அவரது நண்பரான ராஜராஜன் உள்ளிட்ட இருவரும் இரு சக்கர வாகனத்தில் வந்து தாங்கள் கொண்டு வந்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இதில் சரவண சுந்தரத்தின் தலை, இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து தமிழ்ச்செல்வன்,ராஜராஜன் இருவரும் அன்னூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.