கோயம்புத்தூர்: 'ரயில் நிலையத்தை மேம்படுத்துகிறோம்' என்கிற பெயரில், வடகோவை ரயில் நிலையத்தில் நல்ல நிலையில் உள்ள தரைத்தளத்தை அடியோடு பெயர்த்தெடுத்து விட்டு புதிய தரைத்தளம் அமைக்க திட்டமிடும் ரயில்வே துறையின் ஊதாரித்தனமான செலவுகளுக்கு மக்கள் பணம் வீணாவதாக கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று (ஆக.26) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ரயிலில் பயணிக்கும் மூத்த குடிமக்களுக்கும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த சலுகைகளை மத்திய பாஜக அரசு பறித்துக்கொண்டது. இதனால், பல லட்சம் ரூபாய்கள் லாபம் வந்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் வியாக்கானம் தெரிவிக்கிறார்.
இப்படி மிச்சம் பிடிக்கிற மக்கள் பணத்தை ஊதாரித்தனமாக ரயில்வே துறை நல்ல நிலையில் உள்ள கட்டங்களை இடித்து, புதிய கட்டுமானங்களுக்கு திட்டமிடுகிற செயல் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதன் தொடர்ச்சியாகவே, வடகோவை ரயில் நிலையத்தில் உள்ள தரைத்தளங்கள் தற்போது இடிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான், வடகோவை ரயில் நிலையத்தில் பலமான கான்கிரீட்டுகளை கொண்டு தரைத்தளம் அமைக்கப்பட்டது.
மேலும், இங்குள்ள பெரும்பாலான கட்டடங்கள் நல்ல நிலையில் உள்ளது. இந்நிலையில், ஆறு மாதங்களுக்கு முன்பு பல லட்ச்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து அமைக்கப்பட்ட தரைத்தளத்தை தற்போது முழுவதுமாக பெயர்த்தெடுத்து இடிக்கும் பணிகளை ரயில்வே பொறியியல் துறை மேற்கொண்டு வருகிறது.