கோவை கணபதி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மேற்கு மாநகர் கொங்கு குடும்ப விழா நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன், சிரவை ஆதீனம் அடிகளார், உட்பட 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன், ”உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ள நிலையில் நாளுக்கு நாள் பெட்ரோல் டீசலின் விலை அதிகரித்து வருகிறது. பெட்ரோல் டீசல் விலை உயர்வின் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்கிறது. மக்கள் வாழ வேண்டுமென்றால் பெட்ரோல் டீசல் மீதான மாநில அரசின் வரியை நீக்க வேண்டும்.
தேவர் சமுதாயத்தை குறித்து சட்டத்துறை அமைச்சர் கொச்சைப்படுத்தி பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தேர்தலில் 50 தொகுதிகளில் வெற்றிபெறும் வாய்ப்பு எங்களுக்கு உள்ளது. உங்கள் வலிமைக்கு ஏற்றவாறு தொகுதிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். தற்போதைய பட்ஜெட்டில் சிறு குறு தொழிலின் வீழ்ச்சியை மீட்டெடுக்க ஏற்றவாறு எவ்வித அறிவிப்பும் இல்லை.