தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆணவக் கொலை: குடும்பத்தாருடன் மனு அளித்த தர்சினி பிரியா! - கோவை

கோவை: மேட்டுப்பாளையத்தில் கனகராஜ் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக படுகாயமடைந்த தர்சினி பிரியா, தனது குடும்பத்தினர் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களுடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளார்.

petition

By

Published : Jun 26, 2019, 7:10 PM IST

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள வெள்ளிப்பாளையம் பகுதியில் சில தினங்களுக்கு முன்பு சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட கனகராஜ்-தர்சினி பிரியா, அவர்களது உறவினர்களால் தாக்கப்பட்டனர். இச்சம்பவத்தில் கனகராஜ் வெட்டிக்கொலை செய்யப்பட்டார், படுகாயமடைந்த நிலையில் தர்சினி பிரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருவேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டதால், கனகராஜின் அண்ணன் வினோத் குமார் இருவரையும் கொலை செய்ய முற்பட்டார். இதனையடுத்து இன்று காலை வினோத்குமார் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

இந்நிலையில் கனகராஜை வெட்டி கொலை செய்த சம்பவம் தொடர்பாக தர்சினி பிரியாவின் குடும்பத்தார், மேலும் சில சமூக அமைப்புகளை சார்ந்தவர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய எவிடன்ஸ் கதிர், இந்த சம்பவம் முற்றிலும் சாதி வன்மத்தால் நடத்தப்பட்டது எனவும், சம்பந்தப்பட்ட வினோத்குமார் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கொலைக்கு உடந்தையாக இருந்த மற்றொரு நபரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும் மேற்கு மண்டலத்தில் சாதி ஆணவப்படுகொலை அதிகமாக நடைபெறும் பகுதியாக உள்ளதாகவும், பாதிக்கப்பட்ட தர்சினி பிரியா குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் இழப்பீட்டு தொகையாக 50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தமிழகத்தில் ஆணவப் படுகொலைகள் நடைபெறவில்லை என துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், மீண்டும் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது என்று குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் ஆணவ படுகொலையை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details