கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த ஆத்திகுட்டை பகுதியில் சாராயம் விற்பதாக மதுவிலக்கு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மதுவிலக்கு காவலர்களும், அன்னூர் காவல் நிலைய காவலர்களும் சம்பவ இடத்திற்குச் சென்றனர். அப்போது நாச்சிமுத்து என்பவரது தோட்டத்து சாலையில் காட்டு பன்றியை வேட்டையாட மறைத்து வைத்திருந்த அவுட் காயை (நாட்டு வெடி) பறிமுதல் செய்தனர்.
பின்னர் காவலர் செந்தில்குமார் அதைக் கீழே வைக்கும்போது எதிர்பாராதவிதமாக வெடித்து சிதறியது. இதில் அவருக்கு கால் பகுதி, நெஞ்சுப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவரை சக காவலர்கள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.