கோவை:மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் ஒற்றை ஆண் யானை பாகுபலி கடந்த சில மாதங்களாக விவசாய நிலங்களில் தொடர்ச்சியாக புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதால் அந்த யானைக்கு காலர் ஐடி பொருத்தி யானையின் நடமாட்டத்தைக் கண்டறிய வனத்துறையினர் முடிவு செய்தனர்.
இதனையடுத்து கடந்த இரு வாரங்களுக்கு முன்பு பாகுபலி யானைக்கு காலர் ஐடி பொருத்தும் முயற்சி தொடங்கியது. 3 நாட்கள் நடந்த இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. யானையின் பின்னால் தொடர்ச்சியாக வனத்துறையினர் சுற்றியதால் பயந்துபோன யானை இயல்பு நிலைக்கு திரும்பும்வரை கண்காணித்து பின்னர் காலர் ஐடி பொருத்தவனத்துறையினர் முடிவு செய்திருந்தனர்.
கடந்த சில நாள்களாக பாகுபலி யானை வனப்பகுதியில் இருந்து வெளியேறி சமயபுரம் வழியாக விவசாய நிலங்களுக்குள் சென்றுவருகிறது. இந்நிலையில், நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பாகுபலி யானை ஊருக்குள் நுழைய முயற்சி செய்தது. அப்போது, அங்கு வந்த வனத்துறையினர், பாகுபலி யானை மீது சரமாரியாக பட்டாசுகளை வீசி எறிந்தனர்.