கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சுமார் இருநூற்றுக்கும் மேற்பட்ட நாதஸ்வர, தவில் கலைஞர்கள் வசித்துவருகின்றனர். பல்வேறு சுப நிகழ்ச்சிகளில் ஆனந்த இசை வாசித்த இவர்களின் வாழ்க்கை தற்போது சோகத்தில் மூழ்கியுள்ளது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், சுப நிகழ்ச்சிகளுக்கும், மக்கள் ஓரிடங்களில் கூடுவதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, தற்போது அனைத்து சுப நிகழ்ச்சிகளும் தங்களைப் போன்ற இசைக் கலைஞர்கள் இன்றியே நடந்துவருகின்றன. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டே வருமானால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன் இனி தங்களுக்கான வேலைகளே கிடைக்காமல் போகும் வாய்ப்பும் ஏற்படலாம் என வேதனை தெரிவிக்கின்றனர்.
ஊரடங்கு தற்போது தளர்த்தப்பட்டிருப்பதால் மற்ற தொழில்கள் இயல்புநிலைக்குத் திரும்பும் வாய்ப்புள்ளது. ஆனால், மக்கள் கூடுவதற்கு இன்னும் சில மாதங்கள்வரை தடைவிதிக்கலாம் என்றே எண்ணப்படும் நிலையில், வருவாய்க்கும் அன்றாட உணவிற்கும் என்ன செய்வது என்றே தெரியாமலும் இவர்கள் திணறிவருகின்றனர்.