தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அழிவின் விளிம்பில் உள்ள விலங்குகளை ஆவணப்படுத்தும் ஓவியர்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அழிந்தும், அழிவின் விளிம்பில் இருக்கும் வன விலங்குகள், பூக்கள், தாவரங்களை ஓவியர் ராகவன் சுரேஷ் தத்ரூபமாக வரைந்து அடுத்த தலைமுறையினருக்காக ஆவணப்படுத்தி வருகிறார்.

அழிவின் விளிம்பில் உள்ள விலங்குகளை ஆவணப்படுத்தும் ஓவியர்
அழிவின் விளிம்பில் உள்ள விலங்குகளை ஆவணப்படுத்தும் ஓவியர்

By

Published : Nov 21, 2022, 10:14 PM IST

Updated : Nov 22, 2022, 2:07 PM IST

கோவை: காஞ்சிபுரம் மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியைச்சார்ந்தவர், ராகவன் சுரேஷ். சென்னையில் உள்ள ஓவியக் கல்லூரியில் விளம்பரத்துறையில் (commercial art) பட்டம் பெற்றார். சினிமா, விளம்பரத்துறை, அரசுத் துறைகளிலும் பணிபுரிந்துள்ளார். தற்போது இந்திய தாவர மதிப்பீட்டு ஆய்வகத்தின் (Botanical survey of India) கோவை கிளையில் பணியாற்றி வருகிறார். கோவை வடவள்ளி முல்லை நகர்ப்பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

வனத்தின் மீது அதிகப்பற்று கொண்ட ராகவன் சுரேஷ், மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள 5 ஆயிரம் வகை பூக்கும் தாவரங்கள், 139 வகை பாலூட்டிகள், 176 வகை இரு வாழ் உயிரினங்களில், அழியும் நிலையில் இருக்கும் தாவரங்கள், பறவைகள், விலங்குகளை ஓவியமாக வரைந்து ஆவணப்படுத்தி உள்ளார்.

அழிவின் விளிம்பில் உள்ள விலங்குகளை ஆவணப்படுத்தும் ஓவியர்

மேலும், அவற்றின் தமிழ் பெயர், அறிவியல் பெயர்கள் தற்போது எந்தப் பகுதியில் உள்ளது ஆகிய விவரங்கள் அனைத்தையும் பட்டியலிட்டு உள்ளார். 2018ஆம் ஆண்டில் தொடங்கி, 4 ஆண்டுகளில் ஆராய்ச்சியாளர்கள், வன ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உள்ளிட்டோரின் ஆலோசனைகளைப் பெற்று 51 அரிய வகை விலங்குகள் மற்றும் பறவைகள், பூக்கும் தாவரங்கள், 138 ஆர்க்கிட் வகை தாவரங்கள் என அனைத்தையும் ஆவணப்படுத்தி உள்ளார். மேலும் 5 செ.மீ., உயரமே கொண்ட தாவரங்களையும் ஓவியமாக வரைந்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து ராகவன் சுரேஷ் கூறுகையில், ’அடுத்த தலைமுறைக்கு பயன்பெறும் வகையில் அழியும் வகையில் உள்ள தாவரங்கள், பூக்கள், விலங்குகளை அறிவியல் ரீதியாக ஓவியமாக வரைந்து ஆவணப்படுத்தி உள்ளேன். கடந்த நான்கு வருடங்களாக கிடைக்கும் நேரங்களை ஓவியம் வரைய பயன்படுத்திக்கொண்டேன். விடுமுறை நாட்களில் காலை முதல் இரவு வரை ஓவியம் வரைவேன்’ என்றார்.

அழிவின் விளிம்பில் உள்ள விலங்குகளை ஆவணப்படுத்தும் ஓவியர்

உலகில் மிகச்சிறந்த மலைகளில் ஒன்றான மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள உயிரினங்களை எதிர் வரும் தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் வகையில் அறிஞர்களின் ஆலோசனைப்படி ஓவியமாக வரைந்து வருவதாகவும், இதில் அழிந்துபோன களையாடு ஓவியம் மற்றும் அழியும் நிலையில் உள்ள புனுகு பூனை, சருகுமான், வரையாடு ஆகியவற்றையும் ஆவணப்படுத்தி இருப்பதாகவும் ராகவன் சுரேஷ் கூறினார்.

சில தாவரங்களின் பகுதிகளை மைக்ரோஸ்கோப் மூலம் பார்த்து வரைந்ததாகவும், ஓவியம் வரைந்த பின்னர் அவற்றை அறிஞர்களுக்கு காட்டி அதன் நிறங்கள் அமைப்புகள் சரியாக உள்ளதா என சான்று வாங்கிய பின்னரே அதை காட்சிப்படுத்த முடியும் என்றும் கூறினார்.

உலகிலேயே நீலகிரியில் மட்டும் உள்ள நீலகிரி கரும்வெருகு பாம்பு வகை, நீலகிரி காட்டு புறாவை ஓவியம் மூலம் ஆவணப்படுத்தியதாகவும் தெரிவித்தார். வன விலங்குகளின் முக்கியத்துவம் அதன் மூலம் காடுகளின் செழுமை குறித்து வரும் தலைமுறையினர் தெரிந்து கொள்வதற்காக இத்தகைய உயிரினங்களையும், தாவரங்களையும் ஓவியங்கள் மூலம் ஆவணப்படுத்தி வருவதாக ராகவன் சுரேஷ் குறிப்பிட்டார்.

விரைவில் பள்ளி கல்லூரி மாணவர்களிடையே ஆவணங்களை காட்சிப்படுத்த உள்ளதாக ராகவன் சுரேஷ் தெரிவித்தார்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் பரவும் கண் நோய்(Madras Eye) - அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்!

Last Updated : Nov 22, 2022, 2:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details