கடந்த சில நாள்களுக்கு முன்னர் கோவை மாவட்டம், அன்னூர் ஒட்டர்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த கிராம உதவியாளர் முத்துச்சாமி என்பவர் கோபால்சாமி என்ற விவசாயியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் காணொலி வெளியானது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் சாதிரீதியாக நடந்துகொண்ட கோபால்சாமி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டங்கள் மேற்கொண்டனர்.
விரிவான விசாரணைக்கு உத்தரவு
இதுகுறித்து விரிவான விசாரணைக்கு முன்னதாக உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர் சமீரன், மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் தலைமையில் விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் விசாரணை நடத்தி ஆட்சியரிடம் அறிக்கையைத் தாக்கல் செய்தார்.
இதனையடுத்து முத்துசாமியை சாதிரீதியாக விவசாயி கோபால்சாமி பேசியதாகவும், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுப்பதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி காவல் துறைக்கு ஆட்சியர் பரிந்துரை செய்தார்.
பின்னர், விவசாயி கோபால்சாமி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட இரண்டு வழக்குகளில் அன்னூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில் கிராம உதவியாளர் முத்துச்சாமி, அலுவலகத்தில் வைத்து விவசாயி கோபால்சாமியைத் தகாத வார்த்தையில் திட்டித் தாக்கும் மற்றொரு காணொலிக் காட்சி வெளியாகி திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெளியான மற்றொரு காணொலி
சில நாள்களுக்கு முன்னர் விவசாயி கோபால்சாமியின் காலில் கிராம உதவியாளர் முத்துச்சாமி விழுந்து மன்னிப்பு கேட்கும் காணொலிக் காட்சிகள் மட்டும் முதலில் வெளியான நிலையில், தற்போது கிராம உதவியாளர் முத்துச்சாமி, விவசாயி கோபால்சாமியைத் தாக்கும் காணொலிக் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து ஆட்சியர், காவல் துறை அலுவலர்கள் உரிய விசாரணை நடத்தி கோபால்சாமி மீது போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும், பொய் புகார் அளித்த கிராம நிர்வாக அலுவலர் தமிழ்ச்செல்வி, உதவியாளர் முத்துச்சாமி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க : காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட விவகாரம்: குற்றவியல் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு